அரியலூர்: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்பு - ஒருவரை தேடும் பணி தீவிரம்

அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் இருவர் மூழ்கி மாயமான நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
முருகானந்தம் உடல் மீட்கப்படுகிறது
முருகானந்தம் உடல் மீட்கப்படுகிறது

அரியலூர் மாவட்டம், பெரியமறை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர், கொள்ளிடம் ஆற்றின் திட்டில் மாடுகளை மேயவிட்டு இருந்தார்.

மாலை ஆனதும், மீண்டும் மாடுகளை ஓட்டச் சென்றபோது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்ததில் முருகானந்தம் அடித்துச் செல்லப்பட்டார்.

நீண்ட நேரம் ஆகியும் முருகானந்தம் திரும்பி வராததால் அவரை கண்டுபிடிக்கும் வகையில் முருகானந்தத்தின் உறவினர் தஞ்சை மாவட்டம், மடம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தேடுவதற்காக கொள்ளிடம் ஆற்றில் இறங்கியுள்ளார்.

அப்போது அவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் கரையில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டுள்ளனர். தகவலறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர், தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட 2 பேரின் உடல்களை தேடும் பணியில் நீண்ட நேரமாக ஈடுபட்டு வந்தனர். நடுத்திட்டு மேலராமநல்லூர் அருகே, கொள்ளிடம் ஆற்றில் அப்பகுதி மக்கள் குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் சடலம் ஒன்று மிதந்து வந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் அந்த சடலத்தை மீட்டு பார்த்தபோது முருகானந்தம் உடல்தான் என்பது தெரியவந்தது. அதை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு ஆறுமுகம் என்பவரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com