மணல் கடத்தல் தடுப்பு சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட முக்கியமான பணிகளைச் செய்யும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நெல்லையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் முருகையன் கேட்டுக் கொண்டுள்ளார்.
வரும் மே-10ம் தேதி சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள வருவாய்த் துறை ஆணையாளர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடச் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைச் சங்க நிர்வாகிகளுக்குத் தெரியப்படுத்தும் வகையில் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகையன் தலைமையில் துண்டுப் பிரசுரம் வழங்கி பிரச்சார பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முருகையன், ‘’வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே-10ம் தேதி சென்னை சேப்பாக்கம் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கான முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான பிரச்சாரப் பயணத்தை மாநிலம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள். வருவாய்த் துறையில் கடந்த நான்கு ஆண்டுகளாகத் துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படாமல் உள்ளது. முதுநிலை பெற்ற அலுவலர்களுக்கான பணியிறக்கம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது தொடர்பாக அமைச்சர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு 9 மாதங்களைக் கடந்தும் இந்தப் பிரச்சனை தொடர்பான அரசு எந்த ஆணைகளும் வழங்கப்படாமல் உள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மே 10ம் தேதி மாநிலம் முழுதும் உள்ள வருவாய்த் துறை அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழக முதலமைச்சர் இந்தப் பிரச்சனையின் மீது கவனம் கொண்டு மக்களின் பணிகள் பாதிக்காத வண்ணம் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த போராட்டம் காரணமாக நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், சட்டம் ஒழுங்கு பணிகள், சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிப்பு ஏற்படும். சட்டம்- ஒழுங்கு, மணல் கடத்தல் தடுப்பு போன்ற முக்கியமான பணிகளைச் செய்யும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட வேண்டும்’’என அவர் கேட்டுக் கொண்டார்.