கள்ளச்சாராய உயிரிழப்பு: ‘2 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ - அண்ணாமலை

கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணை போகும் 2 அமைச்சர்களை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்ணாமலை
அண்ணாமலை

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் கள்ளச் சாராயத்துக்கு 19 உயிர்கள் பலியாகி உள்ளன. 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், கள்ளச் சாராயத்துக்கு பலியானவர்களை குடும்பத்தினருக்கு கூடத் தெரியப்படுத்தாமல், காவல் துறையே அடக்கம் செய்த அவலமும் நிகழ்ந்திருக்கிறது.

இந்த சம்பவம் நடந்து முடிந்த பிறகு தமிழகத்தில் 1558 கள்ளச் சாராய வியாபாரிகளை கைது செய்தும், பல ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வளவு கள்ளச் சாராய வியாபாரிகள் இருப்பது தெரிந்தும், கள்ளச் சாராயம் விற்பவர்கள் யார்? விற்பனை எங்கே நடக்கிறது? என, தெரிந்திருந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அனுமதித்துவிட்டு தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்வது வெட்கக் கேடு.

யாரை ஏமாற்ற தமிழக அரசு முயற்சிக்கிறது? மரக்காணம் கள்ளச்சாராயம் விவகாரத்தில் மரூர் ராஜா என்ற சாராய வியாபாரியின் பெயர் வெளியாகியுள்ளது. தி.மு.க-வை சேர்ந்த இவர், திண்டிவனம் 20வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா என்பவருடைய கணவர் ஆவார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மிக நெருக்கமான மரூர் ராஜா பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டாலும், அமைச்சரின் செல்வாக்கால் பெரிய அளவில் நடவடிக்கை இல்லாமல் சாராய விற்பனையை தொடர்ந்து வந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் காரில் சாராயம் கடத்திய வழக்கில் மரூர் ராஜா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் அமைச்சரின் நெருக்கத்தால் சிறையில் இருந்தபடியே சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது.

சமூக வலைதளங்களில் தி.மு.க-வை விமர்சித்தால் குண்டாஸ் நடவடிக்கை எடுக்கும் தி.மு.க அரசு பல வழக்குகள் நிலுவையில் இருந்தும் மரூர் ராஜா மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்காமல் இருக்க என்ன காரணம்?

அமைச்சர் செஞ்சி மஸ்தானுடனான நெருக்கமா? ஒரு சாராய வியாபாரியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறாரா?

இத்தனை நாட்களாக நடந்து வரும் கள்ளச் சாராய விற்பனை குறித்த தகவல் அரசுக்கும் காவல் துறைக்கும், தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. கள்ளச் சாராய விற்பனையை தடுத்து நிறுத்துவது, மதுவிலக்கு துறையின் முக்கியப் பொறுப்பு.

ஆனால் அந்த துறைக்கு பொறுப்பான சாராய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தெரியாமல் இவ்வளவு அதிகமாக கள்ளச் சாராய விற்பனை நடந்து இருக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கள்ளச்சாராய விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வருவதாக இருந்ததால் நேற்று சம்பவம் நடந்த இடத்துக்கே வரவில்லை.

ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே செந்தில் பாலாஜி தமிழக அமைச்சர் பதவியில் தொடரும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருவரும் கள்ளச் சாராய விற்பனை குறித்து தெரிந்து இருந்தும் குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டுள்ளார்கள்.

மேலும் தங்களது அமைச்சர் பதவிக்கான பொறுப்புகளில் இருந்து தவறி உள்ளனர். ஏற்கனவே டாஸ்மாக்கின் மூலம் சகோதரிகளின் தாலியை பறிப்பது போதாது என்று, கள்ளச் சாராய விற்பனைக்கு துணை செல்லும் இவர்கள் இருவரையும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

தமிழக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் தாய்மார்களின் கண்ணீரை வெறும் இழப்பீடு கொடுத்து சரி செய்துவிடலாம் என்று முதல்வர் நினைத்தால், அது மிகவும் தவறானப் போக்காகும்.

எனவே மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால், தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதற்கு பா.ஜ.க தயங்காது என்று எச்சரிக்கிறேன்’ என, கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com