பாளையங்கோட்டை மூளிக்குளத்தை சேர்ந்தவர் ஜெகன்(34), நெல்லை மாநகர பா.ஜ.க இளைஞர் அணிச்செயலாளர். கடந்த 30ம் தேதி இரவு மூளிக்குளம் கோயில் பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாய் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.
ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அங்கு திரண்ட அவரது உறவினர்களும், பா.ஜ.க தொண்டர்களும் கொலையாளிகளை கைது செய்யக்கோரி பஸ் மறியல் செய்தனர். பா.ஜ.க மாவட்டத் தலைவர் தயாசங்கர், எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் அங்கு வந்து ஜெகனின் உறவினர்களுக்கு ஆறுதல் அளித்தனர்.
இது தொடர்பாய் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மூளிக்குளம் பாஸ்கர், சமாதானபுரம் அனீஸ் உள்ளிட்ட ஆறு பேர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் தான் லோக்கல் தி.மு.க நிர்வாகியும், தச்சநல்லூர் மண்டல தலைவி ரேவதியின் கணவருமான மூளிக்குளம் பிரபுதான் கூலிப்படையை ஏவி ஜெகனை கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
எனவே காவல் துறையினர் மூளிக்குளம் பிரபுவைத் தேடி ஊருக்குள் சென்றனர். அப்போது அவரது வலதுகரமாய் விளங்கிய ரஞ்சித் என்பவர் தன்னைத் தான் போலீஸ் தேடி வருகிறது என்று எண்ணி வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தி.மு.க நிர்வாகி பா.ஜ.க நிர்வாகியை கொலை செய்யக் காரணம் என்ன என்பது குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் "மூளிக்குளம் பிரபுதான் ஊரில் மிகப்பெரிய தாதா, அரசியல் செல்வாக்கும் அதிகம். அவரை எதிர்த்து வேறு யாரும் அங்கு அரசியல் செய்வதில்லை. ஆனால், புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்த ஜெகன் அண்மையில் பா.ஜ.கவில் சேர்ந்து இளைஞர் அணிச் செயலாளராய் நியமனம் செய்யப்பட்ட பின்னர் மூளிக்குளத்தில் அரசியல் செய்யத் தொடங்கினார்.
குறிப்பாக கோயில் கொடை சமயத்தில் பா.ஜ.க நிர்வாகிகளுடன் சேர்ந்து கொண்டு ஊரில் வலம் வந்தார். அவர் பின்னாலும் இளைஞர்கள் கூட்டம் திரண்டதைப் பார்த்து கடுப்பான மூளிக்குளம் பிரபு, எங்கே தனது செல்வாக்கிற்கு பங்கம் வந்து விடுமோ என்று எண்ணி ஜெகனை தீர்த்து கட்டியிருக்கிறார், அவர் ஊரை விட்டு தப்பி ஓடியுள்ளார், அவரை தேடி வருகிறோம்" என்று தெரிவித்தார்.