பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
இதை எதிர்பார்க்காத அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோருடைய ஆதரவாளர்கள் வருமான வரித்துறையினரை பணியைச் செய்ய விடாமல் முற்றுகையிட்டு அச்சுறுத்தி, வாகனங்களை சேதப்படுத்தி உள்ளனர்.
தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழலில், வருமான வரித்துறை அதிகாரிகளின் மீது தி.மு.க-வினர் நடத்திய வன்முறை தாக்குதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சூழலை பிரதிபலிக்கும் விதமாகவே உள்ளது.
வருமான வரித்துறையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய தமிழ்நாடு காவல் துறை, தங்களுக்கு வருமான வரித்துறை சோதனை குறித்து தகவல் வராததால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை என கூறியுள்ளனர்.
வருமான வரித் துறையினர் வந்தது தி.மு.க-வினருக்கு தெரிந்து, சோதனை நடக்கின்ற இடத்தில் கூட்டம் சேர்ந்தபோது, காவல் துறையினர் விரைந்து செல்லாதது ஏன்? சட்டத்துக்கு புறம்பான பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், சொத்து விபரம், பணம் மற்றும் நகைகளை பதுக்க வருமான வரித்துறையினர் சோதனை தடுக்கப்பட்டதா? என்கிற சந்தேகம் எழுகிறது.
வருமான வரித்துறையினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்துகொண்ட தி.மு.க-வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருமான வரித்துறையினருக்கு போதுமான பாதுகாப்பு வழங்க தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க சார்பில் வலியுறுத்துகிறேன்’ என கூறியுள்ளார்.