தூத்துக்குடியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு 38 கிராம ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கினார்.
கிராமப்புறங்களில் தூய்மைக்காக திட மற்றும் திரவ கழிவுகளை அகற்ற தூய்மை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு 10 மாதம் 2 ஆம் தேதி அன்று தூய்மை பாரத இயக்கம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூபாய் 2 கோடியே 26 இலட்சம் மதிப்பிலான ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின்
மூலம் திடக்கழிவு பணிகளை மேற்கொள்ள, 38 கிராம ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு 38 கிராம ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் பந்தலின் பின்னாடி பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
அந்த பேனரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரின் படங்கள் இருந்தது. ஆனால் பிரதமர் மோடியின் படம் அதில் இல்லை. இது பா.ஜ.க-வினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சித்ராங்கதன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கிராமப்புற ஊராட்சி அமைப்புகள் பெரும்பாலும் மத்திய அரசின் நிதி உதவியுடன் தான் செயல்படுகிறது.
குறிப்பாகப் பாரதப் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராமப்புற ஊராட்சிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்பட்ட நிதியில் தான் 38 பஞ்சாயத்துகளுக்கு டிராக்டர்கள் வாங்கப்பட்டன. அந்த டிராக்டர்கள் அனைத்தும் ஏற்கனவே அந்தந்த பஞ்சாயத்துக்களுக்கு ஒப்படைக்கப்பட்டுவிட்டன.
ஆனால் மத்திய அரசின் உதவி திட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டும் தி.மு.க அரசு ஏற்கனவே வழங்கிய டிராக்டர்களை தூத்துக்குடிக்கு வரவழைத்து அதனை மீண்டும் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் வழங்கி உள்ளனர். தி.மு.க-வினரின் இந்த செயலை பா.ஜ.க கண்டிக்கிறது.
மேலும் மத்திய அரசின் உதவியுடன் கிராம பஞ்சாயத்துக்களுக்கு வழங்கப்பட்ட திட்டம் தான் இது என்று மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் 38 பஞ்சாயத்துப் பகுதிகளிலும் பா.ஜ.க சார்பில் பிரதமருக்கு நன்றி என்ற போஸ்டர் ஒட்டப்பட்டது’ என்று சித்ராங்கதன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
- மேனகா அஜய்