திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தவ்பீக். இவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அம்மாகுளம் கிளைச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
நேற்று இரவு அப்பகுதியில் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென தவ்பீக்கை சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டியதில் படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் வீழ்ந்தார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் அரசு மருத்துவமனையில் கூடினர். தவ்பீக் போதை பழக்கத்திற்கு, போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதால் விரோதம் கொண்ட போதைப் பொருள் விற்பனையாளர்கள் அவரை வெட்டியதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி அரசு மருத்துவமனை உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, "இரண்டு நாட்களுக்கு முன் அரியமங்கலம் காவல் நிலையத்தை அந்தப் பகுதியில் உள்ள குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை வைத்து சுத்தம் செய்துள்ளனர் காவல் துறையினர். இதிலிருந்து, அவர்களுக்கு உள்ள நெருக்கம் அப்பட்டமாக வெளிப்படுகிறது.
சமூக விரோத கஞ்சா விற்பனை, செயின் பறிப்பு, இரண்டு சக்கர வாகன திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் பி.ஜே.பி கட்சியை சேர்ந்த வினோத் மற்றும் அவரது கூட்டாளிகள், சட்ட விரோத செயல்களுக்கு எதிராக போராடும் தவ்பீக்கை வெட்டி இருக்கிறார்கள்.
இதில் பாரதிய ஜனதா கட்சி ஆட்களின் பங்கும் இருக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே காவல்துறை விரைந்து இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்" என்றார் அவர்.
- திருச்சி ஷானு