நெல்லையில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக பிரமுகர் போலீசில் சரண் அடைந்தார்.
நெல்லை மூளிக்குளத்தைச் சேர்ந்தவர் ஜெகன், பா.ஜ.க இளைஞர் அணி பொதுச் செயலாளர். கடந்த 30ம் தேதி மூளிக்குளம் கோயில் பக்கம் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த ஒரு கும்பல் அவரை சரமாரியாய் வெட்டிப் படுகொலை செய்தது.
நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாய் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். போலீசின் தீவிர தேடுதலுக்குப் பின்னர் மூளிக்குளம் சந்துரு, பாஸ்கர், மாரிச்செல்வம் உள்ளிட்ட 10 பேர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், கொலை செய்யத் தூண்டிய தி.மு.க நிர்வாகியும், தச்சநல்லூர் மண்டல சேர்மன் ரேவதியின் கணவருமான மூளிக்குளம் பிரபுவை கைது செய்தால்தான் ஜெகனின் உடலைப் பெற்றுக் கொள்வோம் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிரடியாய் அறிவித்தார். இதனால் டென்சனான போலீஸ் தலை மறையிருந்த மூளிக்குளம் பிரபுவை தொடர்பு கொண்டு அவரை சரண் அடைய கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இதனைத் தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை போலீசில் சரண் அடைந்தார்.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட நடைபயணத்திற்காக தென்காசி செல்லும் வழியில் நெல்லை வந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஜெகனின் உடலைப் பெற்றுக்கொண்டு உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
ஜெகனின் உடலுக்கு மலரஞ்சலியும் செலுத்தினார். சரண் அடைந்த மூளிக்குளம் பிரபுவிடம் தீவிர விசாரணை நடக்கிறது. என்றாலும் தனக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றே இதுவரை மூளிக்குளம் பிரபு சொல்லி வருகிறார் என்கிறார் விசாரணை அதிகாரி ஒருவர்.