சேலம் மாவட்டம் அரிசிபாளையம், வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர். வெள்ளிப் பட்டறையில் வேலை செய்து வந்தார்.
மேலும் பா.ஜ.க-வின் மாநகர இளைஞரணிச் செயலாளராக இருந்து வந்தார். இன்று சேலம் பள்ளப்பட்டி கூட்டுறவு நியாய விலைக்கடை அருகே உதயசங்கர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது 3 பேர் அவரிடம் வந்து பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர், திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் நடுரோட்டில் உதயசங்கரை சராமாரியாக வெட்டி உள்ளனர். இதில் தலை, கழுத்து, கை என உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
அப்போது உதயசங்கர் அருகில் இருந்த பேக்கரிக்குள் வெட்டுக் காயங்களுடன் ஓடினார். ஆனாலும் அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் தரதரவென நடுரோட்டுக்கு இழுத்து வந்து சரமாரியாக வெட்டியது.
இதில் உதயசங்கரின் தலை, வயிறு, கை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உதயசங்கரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் உதயசங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படுகொலை செய்யப்பட்ட உதயசங்கர் மீது ஏற்கனவே நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரால் ஏமாற்றப்பட்ட யாரேனும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்பது குறித்தும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
அதேப்போல் 26வது வார்டு தி.மு.க பிரமுகர் முருகன் என்பவருக்கும், உதயசங்கருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் அவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் சி.சி.டி.வி பதிவுகள் வெளியே யாரிடமும் கிடைக்கக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் கடைகளில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி பதிவுகள் கொண்ட ஹார்ட் டிஸ்க்குகளை சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில் போலீசார் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பார்த்தசாரதி, சேலம்