'ஆயுதங்களுடன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்' - ரவுடிகள் 10 பேர் அதிரடி கைது

கூட்டாளிகள் அரிவாள், கத்தி, உள்ளிட்ட ஆயுதத்துடன் வந்து விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்
Trichy
Trichy

திருவெறும்பூர் அருகே பிரபல ரவுடி பிறந்தநாள் விருந்தில் ஆயுதங்களுடன் கூடி இருந்த ரவுடிகள் 10 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி மேல தெருவைச் சேர்ந்த ஜெகன் (எ) ஜெகதீசன் (எ) கொம்பன் (29) மீது பல கொலை வழக்குகள் உள்ள நிலையில், கூலிப்படையாகவும் செயல்பட்டு வருவதுடன் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி ஜெகன் தனது பிறந்தநாள் விழாவை திருச்சி பகுதியில் போஸ்டர்கள் ஒட்டி பெரிய அளவில் கொண்டாடியுள்ளார். சொந்த ஊரில் வான வேடிக்கை முழங்க கார் மீது அமர்ந்து ஊர்வலம் சென்று உள்ளார். பின்னர் நண்பர்கள் மத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டினார். இந்த பிறந்தநாள் விழாவில் ஜெகனுடன் தொடர்புடைய பல ரவுடிகள் கலந்து கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து 20ம் தேதி இரவு பிறந்தநாள் விழா விருந்து என அவரது கூட்டாளிகளுக்குக் கிடா கறியுடன் தனது வீட்டில் விருந்து கொடுத்துள்ளார். அப்பொழுது அவனது கூட்டாளிகள் அரிவாள், கத்தி, உள்ளிட்ட ஆயுதத்துடன் வந்து அந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகன் மற்றும் அவரது கூட்டாளிகளான தஞ்சாவூர் இராவுசாபட்டியை சேர்ந்த சின்னதுரை மகன் சதீஷ்குமார் (28), அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் மணிகண்டன் (30), அன்பழகன் மகன் மதன்குமார் (30), லட்சுமணன் மகன் சத்யராஜ் (34), தஞ்சாவூர் இன்னத்துக்கான்பட்டியை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் திவாகர் (30), திருச்சி புத்தூர், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஆனந்தன் மகன் ஹரிஹரன் (25), மேட்டு தெரு புது மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் சதீஷ்குமார் (26), மேல சிந்தாமணி எஸ் எஸ் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ராஜ்குமார் (29), வடக்கு காட்டூர் மணவாளன் மகன் பிரசாத் (32) ஆகிய 10 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.

ரவுடி ஜெகனை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றபோது வாகனத்தின் கண்ணாடியில் தன் தலையை மோதிக்கொண்டு அடம் செய்துள்ளார். பின்னர், அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஜெகனின் பிறந்தநாள் விழாவிற்காக நண்பர்களுக்கு விருந்து கொடுத்ததாகவும் மேலும் செலவுக்குக் காசு வேண்டுமென்றும் அதற்கு என்ன செய்யலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளனர்.

அதன் அடிப்படையில் அவர்கள் 10 பேரையும் திருவெறும்பூர் போலீசார் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.

- ஷானு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com