புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரத்தார் சங்கமம் மற்றும் உலகம்பட்டி லெட்சுமணன் செட்டியார் - விசாலாட்சி ஆச்சி அறக்கட்டளை இணைந்து கடந்த மே 1ம் தேதியன்று நடத்திய விழாவில் ‘நகரத்தார் திருமகள்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் ரோஜா வள்ளிக்கண்ணு நாகராஜனுக்கு சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை தொழிலதிபர் பி.எல்.ஏ.சிதம்பரம் வழங்கி சிறப்பித்தார்.
இதனைத்தொடர்ந்து, ரோஜா வள்ளிக்கண்ணுவுக்கு அரங்கில் இருந்த பெண்கள் பலரும் போட்டிப் போட்டிக்கொண்டு பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
விருது பெற்ற நகரத்தார் திருமகள் ரோஜா வள்ளிக்கண்ணுவுக்கு குமுதம் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் வரதராஜன் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதேபோல, தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விருது பெற்றது குறித்து, திருமகள் ரோஜா வள்ளிக்கண்ணு நாகராஜனிடம் பேசியபோது, ‘எனக்கு சிறுவயது முதலே புத்தகம் வாசிப்பது மிகவும் பிடிக்கும். அதுவும் குமுதம் இதழ் என்றால் உயிர். எனக்கு குமுதம் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் வரதராஜன் அவர்கள்தான் ரோல்மாடல். அவர்தான் எங்களது ஆர்வத்துக்கும் செயல்பாடுகளுக்கும் மூலக்காரணம்.
எல்லா வழிகளிலும் உதவியாக உள்ளார். எனவே, இந்த தருணத்தில் குமுதம் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் வரதராஜன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
இந்த விழாவில் பங்கேற்ற சிலரிடம் பேசிபோது, ‘புத்தகங்களை வாசிப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்த பெயர் கோட்டையூர் ரோஜா முத்தையா. மாபெரும் புத்தக சேமிப்பு அவருடையது. பல்லாண்டுகளாக அவர் சேமிப்பில் இருந்த புத்தகக் கருவூலம் சென்னையில் செயல்பட்டு வருகிறது.
அவரது அன்பு மகள்தான் வள்ளிக்கண்ணு நாகராஜன். அவரது தந்தை ரோஜா முத்தையா போலவே தமிழுக்குப் பெரும் தொண்டாற்றி வருகிறார். அவர் நடத்தி வரும் இதழ் நகரத்தார் திருமகள். மாதந்தோறும் வெளிவரும் இந்த நூலில் ‘தமிழ் வளர்த்த நகரத்தார்கள்’ என்ற தலைப்பில் தமிழ் வளர்த்த நகரத்தார்களைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அது மட்டுமல்லாமல், நகரத்தார்கள் நாட்டுக்கும் கல்விக்கும் வேதங்களுக்கும் மற்றும் திருக்கோயில்களுக்கும் செய்த பங்குகளை மிக அற்புதமாக வெளிப்படுத்தி வருகிறார். இந்த விருதால் அவர் பெருமை அடைகிறார் என்பதைவிட, அவரால் இந்த விருது பெருமை அடைகிறது என்பதே உண்மை’’ என்கின்றனர் நெகிழ்ச்சியுடன்.