நத்தம் அருகே தேனீக்கள் கொட்டியதில் காயம் அடைந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பண்ணுவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபள்ளபட்டியில் ஏழுமடை கண்மாயில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில், இன்று 147 பெண் தொழிலாளர்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அந்தப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது தேனீக்கள் திடீரென பெண் தொழிலாளர்களை கொட்டத் தொடங்கியது. இதனால் அங்கிருந்த பெண்கள் அலறியடித்து ஓடினர். எனினும் தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது.இதில் 50 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
பின்னர், தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 50 பெண் தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் காயமடைந்த தொழிலாளர்கள் சிறிது நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பினர்.
காயமடைந்தவர்களை பண்ணுவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், யூனியன் ஆணையாளர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.