வேரோடு பெயர்ந்து விழுந்த மரம்.. 10ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு: தஞ்சையில் சோகம்

தஞ்சையில் பள்ளிக்கூட வளாகத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து மாணவிகள் மீது விழுந்ததில், 10-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழப்பு.
மாணவி உயிரிழப்பு
மாணவி உயிரிழப்பு

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை கண்டகரயம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார். பத்மா தம்பதியினரின் மகள் சுஷ்மிதா என்பவரும், கணபதி அக்ரஹாரம் தட்டாரத் தெருவை சேர்ந்த கணபதி என்பவரின் மகள் ராஜேஸ்வரியும் பசுபதிகோவில் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் 29ம் தேதி மாலை வகுப்பு முடிந்து வீட்டிற்கு செல்ல வகுப்பறையை இருந்து புறப்பட்டுள்ளனர். அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில், பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து இவர்கள் மீது விழுந்தது. படுகாயத்துடன் மரத்தின் அடியில் சிக்கி இருந்த மாணவிகள் இரண்டு பேரையும் பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இதில் சுஷ்மிதா என்ற மாணவி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மாணவியான ராஜேஸ்வரி தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவி உயிரிழந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் தஞ்சை-கும்பகோணம் இடையிலான சாலையில் அய்யம்பேட்டை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் காவல்துறையினர் மாணவி குடும்பத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த மாணவி சுஷ்மிதா குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும், காயமடைந்த ராஜேஸ்வரி குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com