நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டாரத்துக்குட்பட்ட ஒருவந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லிபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி, இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரு மகன்கள். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். பெரியசாமி கொத்தனார் வேலைக்கு சென்று வருகிறார், பிரேமா மோகனூரில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அந்த பேக்கரியில் தர்மபுரியை சேர்ந்த நந்திகேசவன் என்ற இளைஞர் வேலை பார்த்தார். அந்த இளைஞரும், பிரேமாவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். அந்த நெருக்கம் காதலாக மாறியுள்ளது. நான்கு மாத கால காதல், ஸ்டிராங்கான நெருக்கமாகியுள்ளது. பிரேமாவின் கணவர் பெரியசாமிக்கு இவர்களின் விஷயம் எப்படியோ தெரிந்து போக பிரேமாவை பேக்கரிக்கு வேலைக்கு போக வேண்டாம் என சொல்லியுள்ளார்.
தன் காதலர் நந்திகேசவனை பார்க்க முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் பிரேமா. கடந்த 23ம் தேதி தனக்கு காது வலிக்கிறது என்று பிரேமா பெரியாசாமியிடம் கூற, அவர் உடனே மோகனூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார்.
அதன் பிறகு நடந்தவற்றை போலீஸார் விவரிக்கிறார்கள். "பிரேமாவுக்கு காது வலி இல்லை. அவரது திட்டத்தின் ஒரு பகுதிதான் அது. கணவர் பெரியசாமியை கொலை செய்தால் தான், தன் காதலர் நந்திகேசவனுடன் இருக்க முடியும் என்ற முடிவிற்கு வந்துவிட்ட பிரேமா, இது பற்றி நந்திகேசவனிடம் போனில் பேசியுள்ளார்.
இரண்டு பேரும் சேர்ந்து விபத்து போல பெரியசாமியை கொலை செய்ய திட்டம் போட்டிருக்கிறார்கள். கடந்த 23ம் தேதி மருத்துவமனைக்கு சென்ற வழியில் செல்லிபாளையம் - மோகனூர் அருகே ஒரு வளைவில் திரும்பும்போது பின்னால் ஃபாலோ செய்து வந்த நந்திகேசவனும், அவரது நண்பரான காஞ்சிபுரத்தை சேர்ந்த தனுஷும் இரும்பை கொண்டு கண்மூடித்தனமாக வளைவு ரோட்டில் பெரியசாமியை தாக்கியுள்ளனர்.
அதே இடத்தில் துடிதுடித்து இறந்து போயிருக்கிறார் பெரியசாமி. கணவர் இறப்பதை பார்த்து ரசித்துவிட்டு, பிறகு ஆசுவாசமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் பிரேமா. வாகனம் மோதிவிட்டு நிக்காமல் சென்றுவிட்டது என்று எங்களிடம் சொன்னார் பிரேமா. ஆனால் அவருக்கு ஒரு சிறு காயம் கூட ஆகவில்லை, அதுவே எங்களுக்கு சந்தேகம் வந்தது.
பிரேமாவின் ஓவர் ஆக்டிங் சந்தேகத்தை கொடுத்தது. ஊருக்குள் விசாரித்தோம், கேரக்டர் சரி இல்லை என்று சொன்னார்கள். போன் நம்பர் எடுத்து விசாரிக்க ஆரம்பித்தோம் உடனே எல்லாத்தையும் ஒத்துகொண்டார் பிரேமா. கொலை செய்துவிட்டு தப்பித்து போன நந்திகேசவனை தர்மபுரியிலும், தனுசை காஞ்சிபுரத்திலும் தேடி பிடித்தோம். இந்த சம்பவம் குறித்து கூடுதலாக விசாரிக்கவுள்ளோம். இந்த விவகாரத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உண்டா என்று விசாரித்து வருகிறோம்" என்று கூறினார்கள்.