நெல்லை அருகே மலையை விட்டு கிராமப்பகுதியில் இரவில் கரடி நடமாடுவதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்திருக்கிறது. இங்கு புலிகள், ராஜநாகம், சிறுத்தை, யானை, மான், மிளா, கரடி, காட்டுப்பன்றி, அரிய வகை சிங்க வால் குரங்குகள் என பல்வேறு விலங்குகளும், அரிய பறவையினங்களும் இருக்கின்றன.
இவைகளில் யானைகள் அவ்வப்போது, தரைப்பகுதிக்கு வந்து வாழை போன்ற பயிர்களை நாசம் செய்வது வாடிக்கை. சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து தெரு நாய்கள் வளர்ப்பு ஆடுகளை கவ்விச் செல்வதும் அடிக்கடி நடப்பதுண்டு.கரடிகள் எப்போதாவது ஊருக்குள் வரும், கடந்த ஆண்டு பிரம்மதேசம் பகுதியில் உலா வந்த கரடி ரோட்டில் சென்ற வியாபாரிகள் மூன்று பேர்களை தாக்கி காயப்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து வனத்துறை ரோந்தை தீவிரப்படுத்தியது. இந்த நிலையில், கடந்த 17ம் தேதி இரவு கரடி ஒன்று மலையில் இருந்து இறங்கி கிராமத்து தெருவில் ஹாயாய் உலா வரும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பாபநாசம் வன ஊழியர் முத்துக்கிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில், ”மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள வி.கே.புரம் சிவந்தி பட்டிக்கு ஒரு கரடி வந்திருக்கிறது.அதன் வருகை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருக்கிறது. ஊருக்குள் புகுந்த கரடி சிவந்திபுரம் ரோட்டில் அங்கும் இங்கும் அலைவதை காண முடிகிறது. பைக் மற்றும் கார் வரும் போது ரோட்டோரத்தில் மெல்ல பதுங்குகிறது. மலையிலிருந்து கிழக்கே ஒரு கி.மீட்டர் தூரம் வந்து விட்டு மீண்டும் திரும்பி அதே ரூட்டில் பயணித்து மலைக்குள் செல்வதும் கேமிராவில் தெரிகிறது.
நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை அந்தக்கரடி ஊருக்குள் சுற்றியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து வனத்துறை அலெர்ட் செய்யப்பட்டிருக்கிறது. மலையடிவாரங்களில் தீவிர ரோந்துப் பணியும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டிருக்கிறது.தற்போது தென்மேற்குப் பருவமழை பொய்த்துப்போனதால் மலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.இதனால் குடிநீர் தேடி கரடி தரையில் இறங்கியிருக்கலாம்” என்றார்.