குமுதம் ஸ்டிங் எதிரொலி: காவல் நிலையத்தில் சிறப்பு வசதிகள் - கோயம்பேடு இன்ஸ்பெக்டர் அதிரடி

குமுதம் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ எதிரொலியாக காவல் நிலையத்தில் சிறப்பு வசதிகளை செய்து கொடுத்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் அசத்தியுள்ள நிலையில் இதை பலரும் வரவேற்றுள்ளனர்.
காவல் நிலையத்தில் குடிநீர், இருக்கை, கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது
காவல் நிலையத்தில் குடிநீர், இருக்கை, கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் புகார் கொடுக்கவோ, விசாரணைக்காகவோ காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் கால்கடுக்க காத்திருக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்கே நன்கு தெரியும் என்றாலும் நடவடிக்கை மட்டும் எடுத்தபாடில்லை.

இதனை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ‘உட்கார சேர் இல்லை. குடிக்க தண்ணீர் கொடுப்பதில்லை. கழிப்பறை வசதியும் இல்லை’ என்ற தலைப்பில் சென்னையிலுள்ள காவல்நிலையங்களுக்கு விசிட் அடித்து ஸ்டிங் செய்தியாக ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ யூட்யூப் சேனலில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

அதிலும் குறிப்பாக சென்னை கோயம்பேடு காவல் நிலைய கழிப்பறையின் அவலம் குறித்தும், பொதுமக்கள் உட்கார இருக்கை இல்லாமல் கால்கடுக்க நின்றுகொண்டு இருப்பது பற்றியும் வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.

இதைத்தொடர்ந்து கோயம்பேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதாவது, குடிப்பதற்கு தண்ணீர், புகார்தாரர்கள் வந்தால் உட்காருவதற்கு இருக்கை, கழிப்பறையை நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர் வருமாறு செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மேலும் கோயம்பேடு காவல் நிலைய 'உவ்வே' கழிப்பறை தற்போது இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணாவின் முயற்சியால் ‘வாவ்’ கழிப்பறையாக மாறியிருக்கிறது. 

சுத்தம் செய்யப்படாமல் சோகத்தில் கிடந்த வாஷ்பேசினும் டியூப் லைட் வெளிச்சத்தில் ‘பளிச்சென’ முகத்தைக் காட்டி சிரிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் காவல் நிலையத்துக்கு வந்து கால்கடுக்க காத்திருக்க வைக்கப்பட்ட மக்கள் தற்போது உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்கள். 

இதனை பெரிதும் வரவேற்றுள்ள அப்பகுதி பொதுமக்கள் ‘இது, தொடர வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த மாற்றம் ஏற்பட வேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

காவல் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததை சுட்டிக்காட்டி ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ யூட்யூப் சேனலில் செய்தி வெளியாகியிருந்த நிலையில் காவல் நிலையங்களில் கழிப்பறை, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை செய்ய கடந்த ஜூலை 24ம் தேதி ரூ.10 கோடி நிதியை ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இதன் தொடர்ச்சியாகவே கோயம்பேடு காவல் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால் போலீசார் மற்றும் பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

- மனோசெளந்தர்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com