மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளற்ற திரையரங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

திரையரங்க நிர்வாகத்தின் மீது 4 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு.
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராத திரையரங்கத்துக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள குன்றத்தூரை சேர்ந்த எஸ்.சுரேஷ் என்பவர் பூந்தமல்லியில் உள்ள கோகுலம் சினிமாஸ் வளாகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் படம் பார்க்க சென்றுள்ளார்.இரண்டாவது தளத்தில் உள்ள திரையரங்கிற்கு செல்ல சாய்வுதள நடைபாதை அல்லது மின்தூக்கி வசதி இல்லை என திரையரங்கு நிர்வாகத்தினர் தெரிவித்த நிலையில், 60 சதவீத மாற்றுத்திறனாளியான சுரேஷ் சிரமப்பட்டு படிகளில் ஏறிச்சென்று படம் பார்த்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தாமல் இருப்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காததால், 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை விசாரித்த ஆணையத்தின் தலைவர் லதா மகேஷ்வரி, உறுப்பினர் முருகன் ஆகியோர் மனுதாரருக்கு ஏற்பட்ட சிரமம், மன உளைச்சல் ஆகியவற்றிற்கான இழப்பீடாக 1 லட்ச ரூபாயும்,வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்க கோகுலம் சினிமாஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வசதிகளை ஏற்படுத்தி தராத விவகாரத்தில் திரையரங்க நிர்வாகம் மற்றும் அதை முறையாக ஆய்வு செய்யாமல் அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு சமமாக பொறுப்பேற்க வேண்டுமென சுட்டிக்காட்டினர். அதனடிப்படையில், திரையரங்க நிர்வாகத்தின் மீது 4 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com