மாஸ் ஹீரோக்கள் படம் ரிலீஸ் நாளில் பால் சப்ளை பண்ண மாட்டோம் என பால் முகவர்கள் கொந்தளிக்கின்றனர்.
’மாஸ் ஹீரோக்களோட படங்கள் ரிலீஸானலே கடுப்பாகுதுங்ணா. நடு ராத்திரியில இருந்து விடியுற வரைக்கும் காவல் காக்குறதே பொழப்பா போச்சுங்க’ என்று புலம்பிக் கொட்டுகிறார் ஒருங்கிணைப்பாளர் லிங்கம்.
எதை ராத்திரி முழுக்க காவல் காக்குறாரு?ன்னு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். முன்னாடி மாதிரி படப்பொட்டி! எதுவும் இப்ப கிடையாது. எல்லாமே இண்டர்நெட் மூலமாகதான் நடக்குது. ஒருவேளை தியேட்டர் கேண்டீன்ல விக்குற சமோசா, பப்ஸ், பாப்கார்னாக இருக்குமோ?ன்னு தோணலாம். ஆனால் அதையெல்லாம் ராத்திரியே போட்டு வெச்சாக்க ஆறி கசந்து போயிடுமே?....
அப்ப எதைத்தாண்டா இவரு காவல் காத்துட்டு புலம்புறார்?ன்னு நீங்க மண்டைய பிச்சுக்கிறதுக்குள்ள சொல்லிடுறோம். அவரு சொல்றது ‘பால் பாக்கெட் டப்பாவை’. யெஸ்! மாஸ் ஹீரோக்கள் படம் ரிலீஸாகுற நாளில், ஆவின் பாக்கெட்டுகளைத்தான் நடு ராத்திரி முதல் விடியுற வரைக்கும் காவல் காக்க வேண்டியிருக்குதாம்.
ஏன்? அப்படின்னு லிங்கத்துட்டயே கேட்டப்ப, அவரு இப்படி விவரிக்கிறார் “கோயமுத்தூர் மாவட்டத்துல எழுநூற்று எட்டு ஆவின் பால் பூத்கள் இருக்குதுங்க. இவற்றுக்கு ராத்திரி பதினோறு மணி முதல் அதிகாலை 2 மணிக்குள் ஆவின் வாகனங்கள் மூலமா பால் பாக்கெட்டுகள் சப்ளைக்கு அனுப்பப்படுது. அதிகாலை 3 மணியில இருந்து ஏஜெண்டுகள் பால் விற்பனையை ஆரம்பிச்சுடுறாங்க. ராத்திரி முழுக்க கஷ்டப்பட்டு பால் பாக்கெட்டுகளை விநியோகிக்கிறது, விற்பனை பண்றதுன்னு தூக்கம் கெட்டு பிழைப்பை நடத்துறோம். இது ஒரு நாள் பாடு, ரெண்டு நாள் பாடு இல்லைங்க. வாழ்க்கை முழுக்க இதுதான் பொழப்பா இருக்குது.
இந்த நிலையில, அப்பார்ட்மெண்ட், காம்ப்ளெக்ஸ்ன்னு பெரிய இடங்கள்ள மொத்தம் மொத்தமா நாங்க டப்பாவோட பால் பாக்கெட்டுகளை வைப்போம். ஏன்னா அங்கே சப்ளை அதிகம். இப்படி வைக்கிற பால் திருட்டு போறது வாடிக்கையா இருக்குது. யாரோ ஒரு ஏழை குடும்பம் குழந்தைக்கு பால் வாங்க கூட காசில்லாம இப்படி எடுத்து பயன்படுத்துனா கூட மன்னிச்சிடலாம், அரிசி வாங்க பணமும் கூட கொடுக்கலாம்.
ஆனால் இதை திருட்டுப் பசங்க இதை பண்றதுதான் ஆதங்கப்படவும், ஆத்திரப்படவும் வைக்குது. இவங்க மட்டுமில்லாம இப்ப சினிமா ஹீரோக்களின் ரசிகர்களும் இப்படி பாலை டப்பாவோட திருட துவங்கிட்டாங்க. மாஸ் ஹீரோக்கள்னு சொல்லப்படுற பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸாகுறப்ப தியேட்டர்ல உள்ள கட்-அவுட்டுக்கும், போஸ்டருக்கும் பால் அபிஷேகம் பண்றதுக்காக இப்படி ஆவின் பாலை டப்பாவோட திருடிட்டு போயி ஊத்துறாங்க. எங்கே போய் சொல்றாது இந்த கொடுமையை! போலீஸ்ட்டேயும் இந்த புகாரை மனுவா வழங்கியிருக்கோம்.
இனி, மாஸ் ஹீரோக்கள் படம் ரிலீஸாகுறப்ப பால் சப்ளையை நிறுத்துனாதான் இந்த திருட்ட தடுக்க முடியும் போல.” என்கிறார்.
தமிழகம் வெளங்கிடும்!
-ஷக்தி