பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஊட்டி சாலையில் பாகுபலி காட்டு யானை உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம்,மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் மற்றும் பிற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
வனப்பகுதியில் உணவு மற்றும் நீர்நிலைகளைத் தேடி அலையும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து விவசாய பயிர்களை பசியாற தின்பதோடு மட்டும் அல்லாமல் பயிர்களையும் நாசம் செய்து வருகின்றன.
ஒரு சில நேரங்களில் மனித வன விலங்குகள் மோதல் ஏற்பட்டும் வருகிறது.இந்த நிலையில் வனப்பகுதியில் யானைக் கூட்டங்களோடு ஒன்று சேராமல் பாகுபலி என்ற கம்பீர தோற்றம் கொண்ட காட்டு யானை தனியாக வனப்பகுதிக்குள் இடம்பெயர்ந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
மேட்டுப்பாளையம்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சமயபுரம் ஆகிய சாலைகளைக் கடந்து குடியிருப்புகள் வழியாக வனப்பகுதிக்குள் செல்வதை பாகுபலி காட்டு யானை வழக்கமாகக் கொண்டுள்ளது.இந்த நிலையில் நேற்று இரவு பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஊட்டி சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி காட்டு யானை சாலையில் உலா வந்தது.
பாகுபலி காட்டு யானையைக் கண்டதும் அந்த வழியே வந்த வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்து தங்களது வாகனங்களை நிறுத்தி பாகுபலி காட்டு யானையைக்கண்டு ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
ஊட்டி சாலையைக் கடந்த பாகுபலி காட்டு யானை அங்கிருந்த பிரபல ஓட்டல் மற்றும் வணிக வளாகம் அருகே வலம் வந்த பின்னர் தோப்புக்குள் சென்று மறைந்தது. தோப்புக்குள் சென்ற பாகுபலி காட்டு யானை இரவு நேரத்தில் அங்கிருந்த பல்வேறு தோட்டங்கள் வழியாக கல்லாறு வனப்பகுதிக்கு சென்றது. அதன் பின்னர் கல்லாறு ஆற்றில் தாகம் தீர தண்ணீரை குடித்த பின்னர் பாகுபலி காட்டு யானை மீண்டும் இன்று காலை வழக்கம்போல் குடியிருப்புகள் வழியாக சமயபுரம் சாலையை கடந்து நெல்லித்துறை வனப்பகுதிக்குள்சென்று மறைந்தது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் பாகுபலி காட்டு யானை சமயபுரம் பகுதியில் உலா வந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.