தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம்,
"நடைமுறையில் பிராந்திய மொழியில் இந்தியாவை பாரதம் என்று சொல்வது வழக்கம். இந்திய அரசியல் சாசனத்தில் ஒரே இடத்தில் தான் பாரத் என்ற பெயர் வருகிறது. அதிகாரபூர்வமாக நம் நாட்டை இந்தியா என்று தான் அழைக்கிறோம். பாரத என்று இவர்கள் பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. அதிகாரபூர்வமாக பாரத் என பயன்படுத்த போகிறார்களா என தெரியவில்லை. அப்படி ஒரு முடிவு எடுத்தால் பெரிய அசெளகரியங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஒரே நாடு ஒரே தேர்தல் பாரத ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல. தேர்தல் நடத்தவும் இயலாது. ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் ஒவ்வொரு நடைமுறை உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு நான்கு தேர்தல் வருவது நல்லது. அப்போது தான் மக்கள் மனநிலையை புரிந்து கொள்ள முடியும். அரசியல் கட்சியினர் மக்களை புரிந்து கொள்ளவும். மக்கள் எதிர்ப்பை பதிவு செய்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.
உதயநிதி ஸ்டாலின் எந்த மதத்தையோ, மத நம்பிக்கை உள்ளவர்கள் பற்றியோ, மத வழிப்பாடு செய்பவர்கள் பற்றியோ பேசவில்லை. எம்மதமும் சம்மதம் என்பது எங்கள் நிலைப்பாடு. இன்னொரு மாநிலத்தை சேர்ந்த சாமியார் மற்றொரு மாநில அமைச்சரின் தலையை சீவி கொண்டு வா என பகிரங்கமாக சொல்கிறார் அது பற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக அரசு டிஜிபி தலைமையில் ஒரு படை அமைத்து சாமியார் மீது வழக்கு பதிந்து கைது செய்து இங்கு கொண்டு வர வேண்டும். ஒருவேளை தமிழ்நாட்டில் ஒரு மூலை முடுக்கில் ஒருவர் பா.ஜ.க தலைவர் தலையை சீவி கொண்டு வாருங்கள் 10 கோடி ரூபாய் தருகிறேன் என்று கூறி இருந்தால் இந்நேரம் சிபிஐ, அமலாக்கத்துறை, என்ஐஏ என எல்லாம் பாய்ந்து இருக்கும்" என்று தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.