திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அருகே புளியம்பேடு பகுதியை சேர்ந்தவர் பாசில். இவர் பூந்தமல்லியில் இருந்து போரூர் வழித்தடத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் இவரது ஆட்டோவில் பூவிருந்தவல்லி அருகே குமணன் சாவடியில் கல்லூரி மாணவி உள்பட சிலர் ஏறியுள்ளனர். பின்னர் அவர்கள் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் நிறுத்தம் வந்தவுடன் இறங்கியுள்ளனர்.
இறுதியாக ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் விலை உயர்ந்த லேப்டாப் ஒன்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த லேப்டாப்பை டிரைவர் பாசில் உடனடியாக பூவிருந்தவல்லி காவல் நிலையத்திற்கு சென்று ஒப்படைத்துள்ளார்.
லேப்டாப்பை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அது யாருடையது? என விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லேப்டாப்பை தவறவிட்டவர் பூவிருந்தவல்லியைச் சேர்ந்த கல்லூரி மாணவி என்பதால் அவரை வரவழைத்து லேப்டாப்பை திரும்ப ஒப்படைத்தனர்.
மேலும் ஆட்டோவில் கல்லூரி மாணவி தவறவிட்ட லேப்டாப்பை நேர்மையுடன் திரும்ப ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரின் நற்செயலை போலீசார் பாராட்டி அவருக்கு வெகுமதி வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.