தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் கொல்லிமலைக்கு சிறப்பிடம் உள்ளது. மூலிகை வளம் நிறைந்த மலை என்பதே இதற்கு காரணமாகும். நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய மூன்று மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கொல்லிமலைக்கு ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், கொல்லிமலையில் பல்வேறு இடங்கள் உள்ளன.
இதில் குறிப்பிடத்தக்கது ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியாகும். ஏறத்தாழ 160 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை, கீழிருந்து பார்க்கும்போது ஆகாயத்தைப் பிளந்து கொண்டு தண்ணீர் கொட்டுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இதனால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி என்றழைக்கப்படுகிறது. இந்த நீர் வீழ்ச்சிக்கு 1,050 படிக்கட்டுகள் இறங்கிச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பலவிதமான மகிழ்வூட்டும் 'திகில்’ அனுபவங்கள் ஏற்படும் என்றால், அது மிகையில்லை.
அருவிக்கு செல்லும் படிக்கட்டுகள் சில இடங்களில் பெரிய பாறையின் அடியில் செல்வதே திகில் அனுபவத்துக்கான காரணமாகும். இந்த அருவிக்கு செல்ல முடியாத சுற்றுலாப் பயணிகள் அறப்பளீஸ்வரர் கோயில் அருகே உள்ள சிறிய அருவி மற்றும் மலையின் வெவ்வேறு இடங்களில் உள்ள நம் அருவி, மாசிலா அருவி ஆகியவற்றுக்கு வந்து செல்கின்றனர். இதுபோன்ற பல்வேறு சிறப்புகள் மட்டுமின்றி தமிழகத்தின் கடையெழு வள்ளல்களில் ஒருவராக வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படும் ஓரி மன்னன் கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார்.
வில்வித்தையில் அவர் சிறந்து விளங்கியதால் வல்வில் ஓரி என அழைக்கப்பட்டார். தவிர, ஈகை (தானம்) செய்வதிலும் தன்னிகரற்று விளங்கி வந்தார். அவரது சிறப்பு குறித்து சங்ககால இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை உள்ளிட்டவற்றில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவரது சிறப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆடி மாதமான ஆடி 17, 18 தேதிகளில் வல்வில் ஓரிக்கு கொல்லிமலையில் அரசு சார்பில் விழா நடத்தப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு கொல்லிமலைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க ஆடி 18 அன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே ஆடி 18 தினத்தன்று மாவட்டத்துக்கு உட்பட்ட மக்கள் ஏராளமானோர் கொல்லிமலைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அந்தவகையில் இன்று கொல்லிமலைக்கு வந்த சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் கொல்லிமலைமேல் குடிகொண்டிருக்கும் மாசி பெரியகருப்பண்ணசாமி கோவிலில் ஆடு, கோழிகளை படையலிட்டனர்.
ஒவ்வொரு அமாவாசை நன்னாளிலும் களைகட்டும் கோவில் ஆடிப்பதினெட்டு அன்று அமர்க்களப்படும். இன்று ஆடி 18-ஐ முன்னிட்டு கொல்லிமலை மாசிக்கருப்பண்ணசாமி கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், காரவல்லி அருகே செக்போஸ்ட் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதேபோல், வனத்துறையினரும் ரோந்து பணிகளை மேற்கொண்டனர்.
மாசிபெரியண்ணசாமி கோயிலில் இன்று நூற்றுக்கணக்கான ஆடுகள் கோழிகள் பலியிடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. வேண்டியது நிறைவேறினால் கோயில் வளாகத்தில் வெங்கல மணியை தங்களின் வசதிக்கு ஏற்ப சிறியதும், பெரியதுமாக வாங்கி வந்து கட்டிவிட்டு செல்கின்றனர்.
இப்படி பிரசித்தி பெற்ற மாசி பெரியண்ணசாமி கோயிலில் இந்தாண்டும் ஆடி-18 வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாசி பெரியண்ணசாமி கோவிலில் பக்தர்கள் அன்னதானமிட்டு வழிபாடு நடத்தினர்.
இதனால் நூற்றுக்கணக்கான போலீஸார், வனத்துறையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஷானு