மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய கவுன்சிலராகவும், பாமக மாவட்ட துணைச்செயலாளராகவும் இருந்து வருபவர் மகேந்திரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவபாலன். இவர் நேற்று இரவு 10 மணியளவில் கொள்ளிடத்திலிருந்து தனது சொந்த ஊரான மகேந்திரப்பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ஆரப்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென பின்னால் வந்த கார் ஒன்று சிவபாலனின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிவபாலனை காரில் வந்த மகேந்திரப்பள்ளியைச் சேர்ந்த செல்வமணி, மற்றும் கார் டிரைவர் பாலச்சந்திரன் ஆகிய இருவரும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் சிவபாலன் படுகாயமடைந்துளார். இந்நிலையில் சிவபாலன், செல்வமணியின் கையில் இருந்த அரிவாளைப்பறித்து திருப்பி செல்வமணியை தாக்கியுள்ளார்.
இருவருக்கிடையேயான இந்த தாக்குதலில் செல்வமணியின் முகம், கழுத்து, தலை ஆகிய பகுதிகளிலும், சிவபாலனின் வலது கை, தோள் பகுதி ஆகியவற்றிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் விரைந்து காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன? என்று போலீசாரிடம் விசாரித்தோம். "கடந்த நான்கு வருடங்களுக்கு முன் ஊர் பொதுக்குளத்தை தூர் வாரி மண் அள்ளுவதில் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதல் வளர்ந்து தற்போது யாரை முதலில் போட்டுதள்ளுவது? என்ற அளவுக்கு பெரிதாகியுள்ளது. செல்வமணி ஏற்கனவே சிவபாலனிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெரிய பிரச்னையாகவில்லை. இருப்பினும் மகேந்திரபள்ளி கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்றனர்.
இது குறித்து இரு தரப்பிலும் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்மணியின் கார் டிரைவர் பாலச்சந்திரனை கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் தன்னை தாக்கிய செல்வமணியின் கையிலிருந்த அரிவாளை பறித்து சிவபாலன் தாக்கியதில் செல்வமணிக்கு அதிக காயமேற்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதால் பாமக பிரமுகர் சிவபாலன் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ஆர்.விவேக் ஆனந்தன்