கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசு.ஆனால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக அரசு என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ”ஒன்று முதல் பத்தமாம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர் வழங்கினார்.அந்த சத்துணவு திட்ட புகழை அழிக்க முயற்சி செய்து வருகின்றார்கள். தற்போது எந்த கட்டமைப்பு இல்லாமல் தற்காலிகமாக காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்.இதைப் பற்றி நான் குறை சொல்லவில்லை.ஆனால், சத்துணவு திட்டமே நின்று விடுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. சத்துணவு திட்ட பணியாளர் யாரும் இதில் பயன்படுத்தப்படவில்லை.
54 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினித்திட்டத்தை வழங்கினோம்.13 லட்சம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தை வழங்கினோம். ஆனால் அதையெல்லாம் மூடு விழா கண்டு சில திட்டங்களுக்கு திறப்பு விழா காண்கிறார்கள்.மேலும் தேர்தல் அறிக்கையில் கல்வி கடன் ரத்து, நீட் தேர்வு என்று பச்சை பொய் பேசினார்கள் எதையும் நிறைவேற்றவில்லை.
தமிழக சட்டசபையில் உள்துறைக்கான மானிய கோரிக்கையில், கொடநாடு கொலை வழக்கு குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் தெளிவான விளக்கத்தை கூறியுள்ளார். அந்த குறிப்பு எல்லாம் சட்டமன்றத்தில் உள்ளது.அதில் கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசு. ஆனால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக அரசு .
குற்றச்சாட்டப்பட்ட குற்றவாளியுடன் முதலமைச்சர் அருகில் நின்று புகைப்படம் எடுத்திருக்கிறார். கேரளாவில் உள்ளவர்க்கு இங்கு இருக்கும் வழக்கறிஞர் எப்படி ஜாமீன் பெற்றார். தொடர்ந்து கடத்தல், கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி கொடும் குற்றம் புரிந்தவர்களுக்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் எப்படி ஜாமீன்தார்களாக இருந்தார்கள்.
அவர்களுக்கும் திமுகவுக்கும் என்ன தொடர்பு, அவர்கள் விடுதலை செய்ய வாதாடிய திமுக வழக்கறிஞர்களை நீலகிரி சார்பு நீதிபதியாக நியமித்திருக்கின்றனர்.இதில் மர்மம் இருக்கிறது என தெளிவாக கூறியுள்ளார்.இது சட்டமன்ற பதிவில் உள்ளது.
இரண்டு நிகழ்வுகள் உலகம் முழுவதுமாக பேசப்பட்டு வருகிறது. ஒன்று சந்திராயன் 3 நிலவில் வெற்றி பெற்றது.மற்றொன்று எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற மாநாடு வெற்றியை பேசப்பட்டு வருகிறது. இதையெல்லாம் திசை திருப்ப காலவதியானவர்கள் சிலர் பேசி வருகிறார்கள் .இவர்களுக்கு தோல்விதான் பரிசாக கிடைக்கும்.
அதுமட்டுமல்லாது இன்றைக்கு திமுகவின் பி.டீமாக பன்னீர்செல்வம் உள்ளார்.எடப்பாடியார் தலைமையில் மதுரையில் நடைபெற்ற நாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் திமுகவை கண்டித்து பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் திருச்சியில் பன்னீர்செல்வம் மாநாடு நடத்தினார். திமுகவுக்கு எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஒரு சிறப்பான தீர்ப்பை எடப்பாடியாருக்கு வழங்கியுள்ளது .பிறகு மக்களை குழப்பும் வண்ணம், இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் தொடுத்த வழக்கில், இன்றைக்கு நீதிமன்றம் சரியான சம்பட்டி அடியான தீர்ப்பை வழங்கி உள்ளது.இன்றைக்கு அதிமுகவிற்கு எதிராக சென்றவர்கள் அரசியல் அனாதையாக தான் உள்ளார்கள் என்பதை வரலாற்றை பார்த்தாவது இனிமேல் திருந்திக்கொள்ள வேண்டும். இங்கே குழப்பத்திற்கு எந்த வேலையும் இல்லை” எனக்கூறினார்.