வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்- ரூ.7 லட்சம் பொருட்களை பறித்துச்சென்ற சோகம்

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் காயம் அடைந்த மீனவர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடற்கொள்ளையர்களால் பாதிக்கப்பட்ட மீனவர்கள்
கடற்கொள்ளையர்களால் பாதிக்கப்பட்ட மீனவர்கள்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை, வானவன்மகாதேவி பகுதிகளைச்சேர்ந்த மீனவர்கள் மணிவண்ணன், பொன்னுசாமி, வடுகநாதன் ஆகியோருக்கு சொந்தமான 5 பைபர் படகுகளில் வடுகநாதன், தியாகராஜன், ரஞ்சித், ராஜேந்திரன், சிவக்குமார், அருண்குமார், கோவிந்தசாமி, செல்லமணி, மணிமாறன், கதிரவன், கல்யாணசுந்தரம், சிவலிங்கம் உள்பட 19 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றுள்ளனர்.

இவர்கள் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடற்பகுதியில் வலைவிரித்து மீன்பிடித்துக்கொண்டிருந்துள்ளனர்.அப்போது இலங்கையைச்சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 6 பேர் இரண்டு பைபர் படகுகளில் பயங்கர ஆயுதங்களுடன் வந்துள்ளனர். அத்துடன் அதிரடியாக வேதாரண்யம் மீனவர்களின் படகுகளில் ஏறி பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக்காட்டி மிரட்டியதோடு மீனவர்களையும் தாக்கியிருக்கின்றனர்.

அத்துடன் மீனவர்களிடமிருந்து 4 செல்போன், 5 ஜி.பி.எஸ் கருவிகள், பேட்டரிகள், 500 கிலோ மீன்கள், 30 லிட்டர் டீசல் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மீனவர்களை உடனே கரைக்கு ஓடிவிடும்படி எச்சரித்துச்சென்றுள்ளனர்.

இலங்கை கடற்கொள்ளையர்களின் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்துபோன மீனவர்கள் அதிச்சியுடன் ஆறுகாட்டுத்துறை, வானவன்மகாதேவி கடற்கரைக்கு திரும்பியிருக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான மீனவர்களிடம் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார், மற்றும் மீன்வள அதிகாரிகள், கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அத்துடன் கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த மீனவர் சிவலிங்கத்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் வேதாரண்யம் மீனவர்கள் 8 முறை இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடற்கொள்ளையர்களால் மீன்பிடி தொழிலுக்கும், மீனவர்களின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல் தொடர்வதால் மீனவர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

-ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com