வீடு புகுந்து அதிமுக நிர்வாகியை தாக்கிய திமுக பெண் பேரூராட்சி தலைவர், கணவர்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தாக்குதலை தடுக்கச் சென்ற தந்தை, தாய் மீதும் தாக்குதல்.
பாதிக்கப்பட்ட அதிமுக நிர்வாகி, பேரூராட்சி தலைவர், கணவர்
பாதிக்கப்பட்ட அதிமுக நிர்வாகி, பேரூராட்சி தலைவர், கணவர்

வேடச்சந்தூர் அருகே அதிமுக நிர்வாகியை திமுக பேரூராட்சி தலைவர் மற்றும் அவரது கணவர் வீடு புகுந்து தாக்கி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா எரியோடு அதிமுக நகர பொருளராக இருப்பவர் குணசேகரன்.இவரது மனைவி வாசுகி.இவருக்கு மகேஸ்வரன் என்ற மகன் உள்ளார்.மகேஸ்வரன் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார். இவர் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறையிலும் நிர்வாகியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அதிமுகவின் வரலாறு சாதனைகள் என பல்வேறு விஷயங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பொறுத்துக்கொள்ளாத எரியோடு திமுக பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி மற்றும் அவரது கணவர் கார்த்திகேயன் அடிக்கடி அவரிடம் பிரச்னை செய்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்த நிலையில், மகேஸ்வரன் வீட்டில் இருந்தபோது பேரூராட்சி தலைவர் மற்றும் அவரது கணவர் இருவரும் அவருடைய வீட்டிற்கு சென்று அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தாக்குதலை தடுக்கச் சென்ற அவரது தந்தை, தாயை தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், ’எனக்கு பதவி ஒரு விஷயம் கிடையாது. நாளை காலையில் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் வீடு புகுந்து கழுத்து அறுத்து விடுவேன் என்றும் பேரூராட்சி தலைவரும், அவரது கணவரும் கொலை மிரட்டல் விடுத்ததாக மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

படுகாயம் அடைந்த மகேஸ்வரன் எரியோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எரியோடு பகுதிகளில் இதுபோன்று அராஜகத்தில் ஈடுபட்டு வரும் எரியோடு பேரூராட்சி தலைவர் மற்றும் அவரது கணவர் மீது தமிழக முதலமைச்சர் நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com