பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு: கோரிக்கை நிராகரிப்பு

வழக்கு விசாரணையின்போது பதிவுத்துறை இணைக்கப்படும்
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் இருந்து விலக முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக, 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூருக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல் முறையீடு செய்யப்படாததால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கும், பொன்முடி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு செப்டம்பர் 7ம் தேதி விசாரணைக்கு வந்த போது, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து, வேறு ஒரு நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என்பதால், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலும், பொன்முடி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இதுசம்பந்தமாக உத்தரவு பிறப்பிப்பதாக கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தார். இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வழக்கை வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியது உயர்நீதிமன்ற நிர்வாக உத்தரவு என்பதால், வழக்கில் பதிவுத்துறையை சேர்த்து, விளக்கத்தை கேட்டிருக்க வேண்டும் என்றும், லஞ்ச ஒழிப்புத் துறையின் விளக்கத்தையும் கேட்கவில்லை என்றும் தெரிவித்தார்.

வழக்கு விசாரணையின்போது பதிவுத்துறை இணைக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கின் விசாரணையை அக்டோபர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com