சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள்கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்த கீழமை நீதிமன்ற உத்தரவுகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துள்ளார்.
கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனடிப்படையில் 2006 மே 15 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலத்தில் 76,40,443 ரூபாய் சொத்து குவித்ததாக கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இதுதொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரின் மனைவி மணிமேகலை மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், அரசியல் காரணங்களுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு தொடர்ந்ததாகவும் எனவே, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபர் 2022 டிசம்பர் 13ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பில், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து உத்தரவிட்டார்.
அதேபோல கடந்த 2006 -2011ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் பிறபடுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் 44,59,067 ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாக சோ்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, ராமச்சந்திரனின் நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் மீது கடந்த 2011 -ஆம் ஆண்டு டிசம்பர் 20 தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சில வருவாய் ஆதாரங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறியும், 28 வருவாய் விவரங்களை கடந்த 2016-ஆம் ஆண்டு தாக்கல் செய்தது.
தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அமைச்சா் ராமச்சந்திரன் உள்ளிட்ட மூவரும் மனு தாக்கல் செய்தனர்.
அந்த வருவாய் விவரங்கள் குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி, 10 வருவாய் இனங்களை ஏற்றுக் கொண்ட நிலையில் தங்களை விடுவிக்க கோரி கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த விசாரித்த நீதிபதி திலகம், வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் உரிய வருவாய் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் வழக்கிலிருந்து விடுவித்து இந்த ஆண்டு ஜூலை 20 தேதி தீர்ப்பளித்தார்
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் எம்.பி., எல்.எல்.ஏ.-களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ், வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை தாமாக முன்வந்து கிரிமினல் ரிவிசன் பெட்டிசன் என்ற அடிப்படையில் தனித்தனி வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர்கள் மீதான வழக்கில் ஏன் லஞ்ச ஒழிப்புத்துறை சரியாக செயல்படவில்லை? அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன் வைக்கப்படும் போது, அதற்கான முறையான விசாரணை ஏன் நடத்தப்படவில்லை.
எப்போதெல்லாம் நீதி தவறப்படுகிறதோ? அப்போது, உயர்நீதிமன்றம் தனது கண்களை மூடிக்கொண்டிருக்காது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு 3 நாட்களாக தூங்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க தவறினால், நீதிபதியாக தனது கடமையில் இருந்து தவறியதாக கருதுகிறேன்.
தனியாக எந்த நபர்களுக்கு எதிராகவும் செயல்படவில்லை. 2021ம் ஆண்டுக்கு முன் முறையாக விசாரணை நடத்திய அதிகாரிகளின் நிலைபாடு, கடந்த 2021ம் ஆண்டுக்கு பின் ஏன் மாறியது? என்பது தெரியவில்லை என கருத்து தெரிவித்த நீதிபதி, அரசு மற்றும் அமைச்சர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு செப்டம்பர் 20ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.