வீட்டு மனைகளை அளவீடு செய்து கொடுக்கும்படி ஆட்சியரிடம் அருந்ததியர் மக்கள் மனு!

இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை தானே ஆய்வு செய்து உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி
பொதுமக்கள் வாக்குவாதம்
பொதுமக்கள் வாக்குவாதம்

அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைகளை அளவீடு செய்து கொடுக்க வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்களை காவல் துறையினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் ஜடையம்பட்டி, ஆட்டுக்காரன்பட்டி, கோயிலூரான் கொட்டாய், மிட்டா தின்ன அள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் அருந்ததிர் சமூக மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 25 ஆண்டுகள் கடந்தும், இந்த வீட்டுமனை வழங்கப்பட்ட இடங்களை தனித்தனியாக அளவீடு செய்து கொடுக்காமல், வருவாய்த்துறையினர் காலதாமதம் செய்து வந்துள்ளனர். இதில் ஜடையம்பட்டியில் 1996ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

அதே போல் ஆட்டுக்காரப்பட்டியில் 1998ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் தனிநபர் ஆக்கிரமிப்புகளாக அகற்றி அளவீடு செய்து கொடுக்காமல் இருந்து வந்துள்ளது. மேலும் பாலக்கோடு அடுத்த கோவிலூரான் கொட்டாய் அருகே நான்குவழி சாலைக்காக சுங்கச் சாவடியை அமைக்க அருந்ததியர் சமூக மக்களின் வீடுகளை கையகப்படுத்தி உள்ளனர். அதற்கு போதிய இழப்பீடு வழங்கவில்லை என்றும், வேறு இடங்களில் மாற்றுப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க 300-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க, 10 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என தெரிவித்தனர்.

காவல் துறையினர் பொதுமக்களை அனுமதிக்காததால், காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து முதலில் 10 பேரை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். அப்பொழுது மற்றவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் நின்று, தங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் மாவட்ட ஆட்சியர், 50 பேரை அழைத்து குறைகளை கேட்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து மனு கொடுக்க வந்த 50-க்கும் மேற்பட்ட மக்களை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி சந்தித்து பேசினார்.

அப்பொழுது ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இடத்தை அளவீடு செய்து கொடுப்பதாகவும், ஜடையம்பட்டி இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை வெள்ளிக்கிழமை தானே வந்து ஆய்வு செய்து உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

மேலும் பாலக்கோடு அருகே கோவிலூரான்கொட்டாய் கிராமத்தில் அருந்ததியர் மக்களின் இடங்களை சுங்கச்சாவடி அமைக்க எடுத்துக்கொண்ட விவகாரத்தில், கூடுதலாக இழப்பீடு வழங்குவதற்கு ஆவண செய்து கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வேறு இடங்களில் பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.

இதனை தொடர்ந்து புகார் கொடுக்க வந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு கலைந்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் அதிகம் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

- பொய்கை கோ.கிருஷ்ணா

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com