ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

ஆணையம் அமைக்கப்பட்டு, 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு பிறகு அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை இல்லை.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளதாக 2022ஆம் ஆண்டு அக்டோபர் 17ல் அரசாணை வெளியிடப்பட்டது.

ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞரும், ஜெ.ஜெயலலிதா ஃபாலோயர்ஸ் கட்சியின் நிறுவன தலைவருமான ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், ஆணையம் அமைக்கப்பட்டு, 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு பிறகு அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல் தலைவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு அமைக்கப்பட்ட ஆணையம் அளித்த பரிந்துரைகளின்படி, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பொதுமக்களும், அதிமுக கட்சியினரும் காத்திருக்கும் நிலையில், அந்த அறிக்கையை அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆணையத்தின் அறிக்கையின்படி, நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசிடம் கடந்த ஜூலை 9ஆம் தேதி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கும்படி தமிழக அரசிற்கு உத்தரவிட்டு, ஜோசப் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com