விவசாயிகளிடம் பண மோசடி செய்த தோட்டக்கலைத்துறை அதிகாரி கைது!

விவசாயிகளிடம் டிராக்டர், தையல் மிஷின், இலவச வீடு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார் தோட்டக்கலைத்துறை அதிகாரி.
தோட்டக்கலைத்துறை அதிகாரி கைது
தோட்டக்கலைத்துறை அதிகாரி கைது

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த அடைச்சாணி கிராமத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து(37). இவர் சேரன்மகாதேவியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு டிராக்டர், கலப்பைகள் மானிய விலைக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இவரிடம் மனுவை கொடுத்திருக்கிறார்கள்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட பேச்சிமுத்து, மனுவுடன் நேராய் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்குச் சென்று விசாரித்திருக்கிறார். பின்னர், டிராக்டர் மட்டுமல்ல, இலவச வீடு, தையல் இயந்திரங்களையும் வாங்கித் தருவதாய் உறுதி அளித்திருக்கிறார். அதற்கு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி பண வசூல் செய்திருக்கிறார். சுமார் 20 பேர்களிடம் 8.5 லட்சம் ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தியிருக்கிறார்.

பணம் வாங்கிய பிறகும் பேச்சிமுத்து டிராக்டர், இலவச வீடுகள் எதையும் அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கவில்லை. எனவே, சேரன்மகாதேவி ராமசாமி கோயில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி சுப்புலட்சுமி, சேரன்மகாதேவி போலீசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் சிவன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

விசாரணையில் பேச்சிமுத்து பொதுமக்களிடம் பொய்யான தகவல்களைக் கூறி வசூல் வேட்டை நடத்தியிருபப்து உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சஸ்பெண்ட் செய்யக் கோரி தோட்டக்கலைத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது என்றார் சப் இன்ஸ்பெக்டர் சிவன்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com