செந்துறை அருகே அரசு பெண் மருத்துவர் மற்றும் அவரது கணவர் மீது காலணியால் இளைஞர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குமிழியம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரியலூரைச் சேர்ந்த பெண் மருத்துவர் சத்யா என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் சிறப்பாக பணி செய்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், குமிழியம் கிராமத்தைச்சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது அக்கா மகனை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.அப்போது, சிறுவனை மருத்துவர் சத்யாவின் கணவர் சிலம்பரசனை பிடிக்கச் சொல்லியுள்ளார்.ஆனால் சிலம்பரசன் கையில் குழந்தை இருந்ததால் அவர் மறுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ், ”நீ யார், எந்த ஊர் இங்கே எங்கவூர் ஆஸ்பத்திரியில் உனக்கு என்ன வேலை எனத் திட்டி வெளியே போடா என்று தகாத வார்த்தையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த பிரச்னையைப் பூதாகரமாக ஆக்கியுள்ளார். அப்போது அரசு மருத்துவரோ, ”அண்ணா அவர் என் கணவர். நீங்கள் தேவையில்லாமல் பிரச்னை செய்கிறீர்கள்” என்று கூறியுள்ளார்.
ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மருத்துவரின் கணவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முற்பட்டுள்ளார்.இரு தரப்பினருக்கும், வாக்குவாதம் உச்சக்கட்டமாக ஏற்பட்டதால் மருத்துவர் சத்யா மற்றும் கணவர் சிலம்பரசன் ஆகியோரை சுரேஷ் என்பவர் காலணியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மருத்துவர் சத்யா, இரும்புலிகுறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்தான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.