கோவை மேயர் கல்பனாவுக்கு இது போதவே போதாத காலம்தான் போல! ‘எங்க வீட்டு கிச்சன் சுவர்ல யூரினை ஊத்துறாங்க, குப்பையை கொட்டுறங்க, மோசமா திட்டுறாங்க’ என்று மேயர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவரது வீட்டுக்கு எதிர்வீட்டு பெண்ணான சரண்யா கொடுத்த புகார் பற்றி எரிகிறது. அந்த விவகாரம் அறிவாலயம் வரை சென்றுள்ள நிலையில் மேயருக்கு அடுத்த சிக்கல் கிளம்பியுள்ளது. இந்த ரெண்டாவது சிக்கலானது அவரது சொந்த கட்சி புள்ளியாலேயே உருவாகியுள்ளதுதான் அதிர்ச்சியே.
கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 31) அன்று நடந்தது. கூட்டம் துவங்கியதிலிருந்தே பஞ்சாயத்து, பிரச்னை, ஆவேசம், ஆக்ரோஷம்தான். கூட்டம் துவங்கியதுமே அதிமுக கவுன்சிலர் குழு தலைவர் “காலை பத்தரை மணிக்கு துவங்க வேண்டிய கூட்டத்துக்கு பத்து நிமிஷம் லேட்டா வர்றீங்க. இங்கே நாங்க என்ன மிச்சர் சாப்பிடவா வந்தோம்?” என்று எகிற, அதற்கு மேயரோ “உங்க ஆட்சி மாதிரி நாங்க ஊழல் பண்ணலை” என்று பதில் பாய்ச்சல் காட்டினார்.
இதாவது எதிர்க்கட்சி உறுப்பினர் உடனான சண்டை. அதில் ஒன்றும் பெரிய சுவாரஸ்யமில்லை. ஆனால் அடுத்து மேயர் சார்ந்திருக்கும் திமுகவை சேர்ந்த கவுன்சிலரே எழுந்து மேயருக்கு எதிராக சவுண்டு விட்டதுதான் ஹைலைட் ஷாக்கே.
மண்டல தலைவர் மீனா, ‘வ.உ.சி. மைதானத்தில் தனியார் பொருட்காட்சி நடத்துவது தொடர்பான அனுமதிக்கு கையெழுத்து போடாம இருக்கீங்க. அதுக்கு இப்ப சிறப்பு தீர்மானம் நிறைவேற்றுங்க’ என்றதும் மேயர் கல்பனாவோ பாய்ச்சலாக ‘அதில எனக்கு சில சந்தேகங்கள் இருக்குது. அதனாலதான் கையெழுத்து போடலை. அமைச்சர்ட்ட அனுமதி வாங்கிட்டு கையெழுத்து போடுறேன்’ என்றார்.
இதனால் இருவரிடையேயும் வாக்குவாதம் முற்றிய நிலையில் மீனா, “நீங்க தனிப்பட்ட நோக்கத்தோடு இந்த கூட்டத்தை நடத்துறீங்க. அதிமுக ஆட்சி காலத்தில் கவுன்சிலரா இருந்தப்ப கூட இப்படி நான் பழிவாங்கப்படலை. உங்களுக்கு எதிரி நான் தான் என்று பத்திரிகையில சொல்றீங்க. மன்றத்தை விட்டு நான் வெளியேறுகிறேன்’ என்றபடியே நகர துவங்க, மற்ற திமுக கவுன்சிலர்கள் அவரை சமாதானம் பண்ணினார்கள்.
மேயரை திமுக மண்டல தலைவரே இப்படி போட்டுப் புரட்டியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதை வைத்துக் கொண்டு அதிமுகவினர் புதிய பாலிடிக்ஸை செய்ய துவங்கியுள்ள நிலையில் விரைவில் இரண்டு பெண்களையும் அறிவாலயம் விசாரணைக்கு அழைக்கும்! என்கிறார்கள்.
ரியலீ?
-ஷக்தி