நெல்லையில் இன்னொரு கீழடியா?- அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி துலுக்கர்பட்டி அகழாய்வு

1400 குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், 2050 வெண்மை நிறத்தினால் அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்தன.
துலுக்கர்பட்டி அகழாய்வு
துலுக்கர்பட்டி அகழாய்வு

நெல்லை மாவட்டம், வள்ளியூர், நம்பியாற்றுப் படுகையில் துலுக்கர்பட்டி கிராமத்தின் வெளியில் 36 ஏக்கர் நிலம் சுமார் 2.5 மீட்டர் உயரத்தில் சின்ன குன்று போல் காணப்படுகிறது. இங்கு ஆடு, மாடு மேய்க்கச் சென்றவர்கள் வித்தியாசமான கறுப்பு, சிவப்பு நிற பானை ஓடுகளை கண்டுபிடித்தனர். இந்த விஷயம் பத்திரிக்கைகளில் வெளியாகவே தொல்பொருள் துறை அலுவலர்கள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு எண்ணற்ற தொல்பொருட்கள் புதைந்து கிடந்ததை கண்டு பிடித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு அங்கு அகழாய்வு செய்ய உத்தரவிட்டது. முதல் கட்ட ஆய்வுகள் குறித்து கலெக்டர் கார்த்திகேயன் கூறுகையில், ’’துலுக்கர் பட்டியில் மொத்தம் 17 குழிகள் தோண்டப்பட்டன. அங்கு 1009 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. வெள்ளி முத்திரை காசுகள், செம்பு, இரும்பு பொருட்கள், சுடுமண் பொம்மைகள், சதுரங்க காய்கள், நீலக்கல், கண்ணாடி, பளிங்கு கல்மணிகள் இருந்தன.


1400 குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், 2050 வெண்மை நிறத்தினால் அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்தன. முதுமக்கள் தாழிகளின் உடைந்த ஓடுகள் கிடைத்திருக்கின்றன. குடியிறுப்பு மற்றும் தொழிற்சாலைகள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. எனவேதான் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு அரசு அ மதி கொடுத்திருக்கிறது’’என்றார்.

அதன்படி கடந்த 6ம் தேதி இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணியினை முதல்வர் ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்திருக்கிறார். இரண்டாம் கட்ட அகழாய்வுப்பணிகளுக்காக 8 குழிகள் தோண்டப்பட்டன. அதில் செம்பு மோதிரம், இரும்பு பொருட்கள், பாசிமணிகள், நீலக்கல் மணி, பளிங்கு கல்மணிகள் கிடைத்தன. தற்போது தமிழி எழுத்தில் புலி என எழுதப்பட்ட கறுப்பு சிவப்பு பானை ஓடு கிடைத்தது. தற்போது, 'திஈ ய, திச, குவிர' என பொறிக்கப்பட்ட பானையோடுகள் கிடைத்திருக்கின்றன.

இது குறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகையில், ’’கீழடி போன்று துலுக்கர்பட்டியிலும் மக்கள் குடியிருப்பு இருந்திருக்கிறது என்பது இந்த அகழாய்வில் தெரிய வந்திருக்கிறது. எனவேதான் அமைச்சர் தங்கம் தென்னரசு 'துலுக்கர்பட்டி அகழாய்வு அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி' என வர்ணித்திருக்கிறார். முழு வீச்சில் அகழாய்வு செய்த பிறகே ஒரு முடிவுக்கு வர முடியும்’’ என்றார்கள்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com