மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழக மக்களிடம் விளக்கி கூறும் வகையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.
இந்த பாதயாத்திரை தொடக்க விழா ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே இன்று நடந்தது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ‘தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க ஆட்சியை அகற்றுவதுதான் நம்முடைய பணி. வருகின்ற 2024ல் மத்தியில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார்.
பா.ஜ.க-வை சேர்ந்த 400 எம்.பி-க்கள் வெற்றி பெறுவார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து பா.ஜ.க சார்பில் 40 எம்.பி-க்கள் டெல்லி செல்வார்கள்.
எனது யாத்திரை ஒரு வேள்வியாகவும், தவமாகவும் இருக்கப் போகிறது. பாதயாத்திரை தொடக்க விழாவுக்கு வந்த கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி. வரும் காலத்தில் நாம் நிறைய பேசுவோம்.
மேலும் இந்த பாதயாத்திரையிலும் நிறைய விஷயங்கள் குறித்து பேசுவோம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர்.பி.உதயகுமாருக்கு நன்றி.
பா.ஜ.க-வின் வளர்ச்சியையும், வெற்றியையும் உறுதி செய்யும் நடைபயணமாக இந்த பாதயாத்திரை இருக்க போகின்றது. பா.ஜ.க மக்களுக்கான கட்சி. பாரத மாதா உறக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் என விவேகானந்தர் கூறியிருந்தார்.
கடந்த 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், உறக்கத்தில் இருந்து பாரத் மாதா எழுந்தார். உலக நாடுகளும் கூட இதை ஒப்புக் கொள்கின்றன. இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகளே பார்க்கின்றன.
கோடிக்கணக்கான மக்களுக்கு சொந்த வீடு, கேஸ் சிலிண்டர், தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தவர் மோடி. அவர் ஒரு சாமானியர். அவர் நடத்தும் ஆட்சி சாமானியர்கள் ஆட்சி. 9 ஆண்டுகளில் இந்தியாவை பெருமையின் உச்சிக்கு பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார்.
பாரத மாதா விழித்துவிட்டாள். தமிழ் தாய் விழிக்கவில்லை. அவரை விழிக்க வைக்கும் பயணமே ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரை. மேலும் தமிழ்த்தாயை மீட்டு எடுக்கும் பயணம் இது.
ஊழலில் திளைத்துள்ள தி.மு.க-வை வீழ்த்தும் பயணம் இது. அதை உணர்ந்துதான் கூட்டணிக் கட்சிகள் இங்கே வந்துள்ளன. இது ஒரு நீண்ட நெடிய வேள்வி இது. இந்த யாத்திரை ஒரு தவம் போல நடக்கப் போகிறது.
நான், பட்டி.. தொட்டி எல்லாம் செல்ல போகிறேன். மக்களிடம் பேசப் போகிறேன். பிரதமர் மோடி இதயப்பூர்வமாக தமிழராக தன்னை காட்டிக் கொண்டுள்ளார். தமிழர்களின் புகழை இந்த அளவிற்கு எந்த பிரதமரும் தூக்கிப் பிடித்ததே கிடையாது.
மேலும் ஐ.நா சபை முதல் உலகம் வரை திருக்குறளை கொண்டு சென்றவர் பிரதமர் மோடி. அதை மறுக்கவே முடியாது. தமிழ்நாட்டை மாற்றும் சக்தி இந்த யாத்திரைக்கு உள்ளது. பயனடைந்த ஒவ்வொருவரின் முகவரின்தான் பிரதமரின் முகவரி’ என்றார்.