நாளைய முதல்வர் அண்ணாமலை...விளம்பரம் கொடுத்து அதிமுக பிபியை ஏற வைத்த தூத்துக்குடி பாஜக!

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக பாஜக துணை நிற்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என அதிமுகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பாஜக போஸ்டர்
பாஜக போஸ்டர்

தூத்துக்குடியில் நடை பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலையை நாளைய முதல்வர் என்று விளம்பரம் செய்து அதிமுகவினரின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.

அதிமுக பொதுச்செயலாளர் யார்? என்கிற சட்ட போராட்டத்தில் ஓபிஎஸ்-ஐ வென்று இபிஎஸ் சாதித்து விட்டார். அதிமுக முழுமையாக இபிஎஸ் வசம் வந்துவிட்டது. சமீபத்தில் டெல்லியில் நடந்த என்.டி.ஏ கூட்டணிக் கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு பன்னீர்செல்வத்தை அழைக்காமல் எடப்பாடி பழனிச்சாமிக்கு விடுத்தது பாஜக தலைமை. அதன் மூலம் என்.டி.ஏ கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவே இருக்கிறது.

அதைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத்திற்கு எப்போது தேர்தல் நடந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் என்று அதிமுகவினர சொல்லி வருகிறார்கள். ஜெயலலிதா இருந்தபோது இருந்த அதிமுக உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகரித்து சாதித்துக் காட்டி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த நிலையில் தனது பலத்தை பொதுமக்களுக்கு காட்ட மதுரையில் அதிமுக மாநாட்டை நடத்த இருக்கிறார். அந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்டி தன் மீது அனைவரின் பார்வையும் திரும்ப வைக்க வைக்க வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியின் படைத்தளபதிகளான முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், செல்லூர் ராஜு, உதயகுமார், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, வளர்மதி ஆகியோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட தலைநகரங்களில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை செய்தார்கள். இந்த மாவட்டத்திலிருந்து இத்தனை பேர் மாநாட்டிற்கு வந்தாக வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அதிரடி உத்தரவுகளை அவர்கள் பிறப்பித்து சென்றனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நடைபயணம் சென்று கொண்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. கடந்த மூன்று நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் அவரது நடைபயணம் இருந்தது. அண்ணாமலை வரவேற்று விளம்பரம் கொடுத்த பாஜக நிர்வாகிகள் நாளைய முதல்வரே என்று விளம்பரம் செய்துள்ளனர். இது அதிமுக வரை லேசாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அது பற்றி தூத்துக்குடியை சேர்ந்த அதிமுக அமைப்பு செயலாளர் சின்ன துறையிடம் கேட்டோம். "பாஜக தலைவரை பாஜக நிர்வாகிகள் அடுத்த நிகழ்வு என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. அது அவர்கள் ஆசையாக இருக்கலாம். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைமை அதிமுக தான். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும். எனவே தமிழகத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார். கடந்த இரண்டு வருட திமுக ஆட்சியின் அவலங்களை பார்த்த மக்கள் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக உறுதி எடுத்து விட்டனர்.

சமீபத்தில் மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தது எதிர்க்கட்சிகள். அப்போது பாஜக அரசை காப்பாற்ற பாஜகவை ஆதரிப்பது அதிமுக. எனவே தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பாஜக துணை நிற்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com