கோவை விமான நிலையத்தில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய பின்னர் ஆளுநர் அதை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரை பதவி நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா? என்பதற்குள் பா.ஜ.க செல்ல விரும்பவில்லை.
அதே நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2, 3 முறை அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தி உள்ளார்.
ஆனால் தற்போது அமைச்சரை நீக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகிறார். வழக்கு இருக்கின்ற எல்லா அமைச்சர்களையும் நீக்க ஆளுநர் சொல்லவில்லை.
உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய வழக்கில் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி பயன்படுத்துகிறார் என்பதாலேயே இந்த விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அமைச்சரவையை சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் முதலமைச்சர் இந்த விவகாரத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்.
தமிழக ஆளுநர் எடுக்கும் முடிவுகள் சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஆளுநர் எதற்கு தனது முடிவை திரும்ப பெற்றார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏன் முதல்வருக்கு இருக்கிறது? தமிழகத்தில் உள்ள 99 சதவீதம் அமைச்சர்களின் மீது வழக்கு இருக்கிறது.
செந்தில் பாலாஜி மீது ஊழல் வழக்கு இருக்கிறது. அவர், அமைச்சர் பதவியை கேடயமாக பயன்படுத்துகிறார் என்பதால், இந்த நடவடிக்கை தமிழக ஆளுநரால் எடுக்கப்பட்டு வருகின்றது.
செந்தில் பாலாஜி மீது பா.ஜ.க-வுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது. அவருடைய குற்றங்களின் மீது தான் வெறுப்பு. முதலமைச்சரின் நடவடிக்கைகள் தனிமனிதனை காப்பாற்றும் வகையில் இருக்கிறது.
ஒரு பேச்சுக்காக அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுப்போம் என்கிறார்கள். செந்தில்பாலாஜியின் தம்பியே தற்போது தலைமறைவாக இருக்கிறார்.
மாநில அரசு சிதம்பரம் கோவில் விவகாரத்தில் தீட்சிதர்களுக்கு பிரச்னை கொடுக்கக் கூடாது. மீண்டும் பிரச்னை கொடுத்தால் நானே சிதம்பரத்துக்கு சென்று போராட்டம் நடத்துவேன்’ என்றார்.