சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதையடுத்து பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து பேசியிருப்பதாவது, "அமைச்சர் உதயநிதி பேசியிருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் பேசியதை திரித்து அரசியலாக்க பார்க்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அது மட்டுமல்லாது பிரதமர் மோடி பொய் செய்தியை பரப்பி வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடி நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் கடுமையாக உழைக்க கூடியவர். சரி ஸ்டாலினிடம் ஒன்றை கேட்கிறேன், சனாதனம் பற்றி பேசும் நீங்கள் உங்கள் கட்சியில் பட்டியலின சமூகத்தினருக்கும், பெண்களுக்கும் முதலில் சம உரிமை கொடுக்கப்பட்டுள்ளதா? திமுக அமைச்சரவையில் 3 பேர் மட்டுமே பட்டியலின சமூகத்தினர், 2 பேர் மட்டுமே பெண்கள்.
ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான 79 பேர் கொண்ட மத்திய அமைச்சரவையில் 20 பேர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 5 பேர் அமைச்சர்களாகவும், 11 பெண்களும் இருக்கிறார்கள். இதன் அடிப்படையில் உங்கள் கட்சியில் இருப்பவர்களுக்கு நீங்களே அரசியல் அங்கீகாரத்தையும், அதிகாரத்தையும் கொடுக்கவில்லை என்பது புலனாகிறது.
தேர்தல் சமயத்தில் மட்டும் எம்மதமும் சம்மதம் என்று திமுக நடத்தும் நாடகத்தை பார்த்து தான் வருகிறோம். மற்ற சமயங்களில் நாங்களும் இந்துக்கள் தான் என்பார்கள். சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று திமுக சொல்கிறது. சனாதன தர்மத்தை காப்போம் என்று நாங்கள் சொல்கிறோம். தமிழகத்தில் இருந்து ஏதாவது ஒழிக்கப்பட வேண்டும் என்றால் அது திமுக தான். D-டெங்கு, M-மலேரியா, K-கொசு இதனை ஒழித்துக்கட்ட வேண்டும்" என்று தனது X தளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.