இபிஎஸ் சொன்னால் கிணற்றிலும் நான் குதிக்கத் தயார் - எஸ்.பி.வேலுமணி

எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர், அவர் கிணற்றில் குதிக்க சொன்னால் கூட நாங்கள் குதிப்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.
எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

அதிமுகவின் கட்சி ரீதியான கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது, "ஒரு கூட்டணிக்குள் இருந்து கொண்டு கட்சியின் தலைவரை விமர்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அண்ணாவை பற்றி பேச வேண்டியது அவசியமா? அவரை பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. அண்ணாவை பற்றி உண்மைக்கு புறம்பான கருத்துகளை பேசியதை தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் அண்ணாமலை அதை செய்யவில்லை தொடர்ந்து பேசி கொண்டிருந்தார். அண்ணாவை பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது.

கட்சியின் மாநில தலைவர் உண்மையை திரித்து, பொதுவெளியில் பேசுவது அழகல்ல. முத்துராமலிங்க தேவர் அன்று நிகழ்ச்சியில் பேசியது என்னவென்றால், கோயில் வளாகத்திற்குள் நடைபெறும் நிகழ்ச்சியில் சமையம் சார்ந்து பேசும் விஷயம் சரியல்ல, இந்த இடத்தில் பேச வேண்டாம் என்று கூறினார். விழாவினை தலைமை தாங்கியவர் பி.டி.ராஜன், பேச்சாளருக்கு தன் கருத்தை பதிவு செய்ய உரிமை இருக்கிறதல்லவா என்று பிடிஆர் அவருடைய கருத்தினை தெரிவித்தார். இந்த விழாவினை இனி வரும் காலங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இல்லாமல், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்தலாம் என்று முத்துராமலிங்க தேவர் கூறினார்.

எஸ்.பி.வேலுமணி, இபிஎஸ்
எஸ்.பி.வேலுமணி, இபிஎஸ்

முத்துராமலிங்க தேவரின் வேண்டுகோளுக்கு இனங்க மதுரை தமுக்கம் மைதானத்திற்கு மாற்றப்பட்டது அந்நிகழ்ச்சி. இதுவே உண்மை, அண்ணாவும், பி.டி.ராஜனும் மன்னிப்பு கோரவில்லை வருத்தமும் தெரிவிக்கவில்லை, அண்ணாமலை கூறியது பொய்யான செய்தி. அண்ணாவை பற்றி தவறாக பொய்யான செய்தியை பேசிவிட்டீர்கள், எங்கள் கட்சியின் பெயரையே அவர் தான் தாங்கி நிற்கிறார். அப்படி இருக்கும் போது அவரை பற்றி பேசினால் எப்படி எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும்.

தேர்தலுக்காக கட்சியின் கொள்கையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். நாங்கள் எடப்பாடி பழனிசாமி என்ன சொல்வாரோ அதை தான் செய்வோம், அவர் கிணற்றில் குதிக்க சொன்னால் கூட குதிப்போம். எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு இவர்கள் தான் தலைவர், நீங்கள் வந்து எங்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம்" என்று பேசியுள்ளார்.

அண்ணாவை பற்றி தவறான விஷயத்தை பேசிய அண்ணாமலைக்கு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்து பகிரங்கமாக குற்றச்சாட்டினை பதிவு செய்த நிலையில், தற்போது அவர்கள் வரிசையில் எஸ்.பி.வேலுமணியும் பகிரங்கமாக அண்ணாமலையை சாடியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com