செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே உள்ள நின்னகாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமு (30). இவர் மறைமலைநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கழிவுநீர் லாரி ஓட்டி வருகிறார். இன்று மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே சாலை ஓரமாகத் தனது லாரியை நிறுத்திவிட்டு தேநீர் குடித்து விட்டு வந்து பார்த்த போது லாரியில் வைத்திருந்த 1000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மறைமலைநகர் காவல்நிலையத்தில் ராமு புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயகுமார் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் ராமுவின் லாரியில் இருந்து பணத்தைத் திருடிய நபர் கூடுவாஞ்சேரி அருகே உள்ள தைலாவரத்தை சேர்ந்த ஹரிகுமார் (43) என்பவரைக் கைது செய்தனர். ஹரிகுமார் மீது ஏற்கனவே குரோம்பேட்டை, ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி என 35க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் ஹரிகுமாரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிகுமாரை ஜாமினில் விடுவித்தார்.