சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்தை பூட்டுபோடும் போராட்டத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பத்தூர் மாநகராட்சி அதிகாரிகள் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைபடுத்தாமல் கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றும் ரசாயன கழிவுகளை ஏரியில் விடுவதை கண்டித்து மண்டல அலுவலகத்தை பூட்டுப்போடும் போராட்டம் நடைபெற்றது.
குறிப்பாக அம்பத்தூர் ஏரி பாதுகாப்பு இயக்கத்தினர் வாரத்தில் ஒரு நாள் அப்பகுதி மக்கள் இணைந்து ஏரி சுற்றுப்பகுதிகளை தூய்மைப்படுத்துவதும் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு ஏரியினை பராமரித்து வருகிறனர்.அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அம்பத்தூர் மண்டலம் மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் மற்றும் ரசாயன கழிவுகளை ஏரியில் அதிக அளவில் கலந்து விடுவதால் ஏரி நீர் மாசுபட்டு குடிநீர் ஆதாரம் முற்றிலும் தடுக்க போவதாக குற்றம் சாட்டி கொரட்டூர் ஏரி பாதுகாப்பு சங்கத்தினர் பல்வேறு வாசகங்களை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டபோது போராட்டத்தில் கலந்துகொண்ட மனோன்மணி(80) வயது மதிக்கத்தக்க மூதாட்டி நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.பாதுகாப்பு பணியில் இருந்த அம்பத்தூர் காவலர் மூதாட்டியை தூக்கி கொண்டு 108 ஆம்புலன்ஸில் ஏற்றினார்.
அப்போது, அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் டிரைவர் இல்லாமல் இருந்ததால் சிறிது நேரம் காவல் துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் மூதாட்டி முதலுதவிக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும், போராட்டக்காரர்களை அம்பத்தூர் மண்டல தலைவர் பி.கே.மூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று அறிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.