செங்கல்பட்டு: நிதி நிறுவன ஊழியர் அடித்துக்கொலை - தகாத உறவால் நேர்ந்த சோகம்

தகாத உறவை துண்டிக்காததால் நிதி நிறுவன ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சோக சம்பவம் கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்தவர், கொலை செய்யப்பட்டவர்
கொலை செய்தவர், கொலை செய்யப்பட்டவர்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள வைப்பனை கிராமத்தை சேர்ந்தவர் குணசேகர் (25). திருமணம் ஆகாதவர். மதுராந்தகத்தில் இயங்கி வரும் கிராம சக்தி பைனான்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு வழங்கப்படும் கடன் தொகையை வசூல் செய்யும் வேலை இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சூனாம்பேடு பகுதியில் மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை வசூல் செய்யும் பணியில் குணசேகர் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் அதேப் பகுதியை சேர்ந்த சோபனா என்ற திருமணமான பெண்ணுக்கும், குணசேகருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த சோபனாவின் தம்பி பாவலன் ஆத்திரம் அடைந்து குணசேகரை கண்டித்துள்ளார்.

ஆனாலும் இவர்களது உறவு நீடித்ததால் பாவலன் தன்னுடைய நண்பர்கள் மூலம் குணசேகரை பழிவாங்க முடிவு செய்துள்ளார். அதற்காக வேலைக்கு வந்த குணாவிடம் ‘மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் லோன் கேட்கிறார்கள். வந்து அவர்களிடம் பேசு’ என கூறி, குணசேகரை அழைத்து சென்றுள்ளார். பின்னர் தயாராக இருந்த 10க்கும் மேற்பட்டோர் அவரை தாக்கியுள்ளனர்.

இதில், படுகாயம் அடைந்து அலறி துடித்த குணசேகர் சிறிது நேரத்தில் மயங்கி சாய்ந்துள்ளார். உடனே அவரது போனை எடுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து ‘விபத்தில் காயம் அடைந்து கிடப்பதாக’ கூறிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாகனத்தில் வந்து, படுகாயங்களுடன் கிடந்த குணசேகரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி குணசேகர் உயிரிழந்தார்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் தகராறு வழக்காக பதிவு செய்து இருந்த நிலையில் குணசேகர் உயிரிழந்ததை அடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து மதுராந்தகம் காவல் ஆய்வாளர் தர்மலிங்கம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் முக்கிய குற்றவாளிகளான மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த மோகன், வெற்றிவேல், சந்தோஷ், சேகர், செல்வகுமார், பரத், டோல்க் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை மதுராந்தகம் காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com