சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் வேலு. இவர் தனக்கு சொந்தமான எலெக்ட்ரிக் பைக்கில் முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இருசக்கர வாகனத்தில் இருந்து கரும்புகை வெளியே வந்தது.
இதனால் அச்சம் அடைந்த வேலு உடனடியாக தனது வாகனத்தைச் சாலையோரம் நிறுத்தினார். பின்னர் சாலையோரம் நிறுத்திய சில நிமிடங்களில் அவரது எலெக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இச்சம்பவத்தை பார்த்த அக்கப்பக்கத்தினர் உடனே தீயணைப்புத்துறைக்கு தெரிவித்துள்ளனர். தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் வேலு கூறுகையில், ‘எலெக்ட்ரிக் பைக் வாங்கி 11 மாதங்கள் மட்டுமே ஆகிறது. அதற்குள் இப்படி தீப்பிடித்து எரியும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதுதொடர்பாக நிறுவனத்தில் முறையிட்டு இழப்பீடு கேட்பேன்’ என கூறினார்.
- மேனகா அஜய்