காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயிற்சி நிலையத்தில் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் ரூ 3.73 கோடி மதிப்பீட்டில் அதிநவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதில் நவீன இயந்திரங்கள், கருவிகள், வன்பொருட்கள், மென்பொருட்கள் மற்றும் மின்சார வாகனங்கள் ஆகியவை மாணவர்களின் பயிற்சிக்காக நிறுவப்பட்டுள்ளது.
அந்தந்த அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி கூடம் மற்றும் ஆய்வகத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு இன்னும் சில நாட்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
இதனை முன்னிட்டு ஒரகடம் பகுதியில் செயல்படும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பயிற்சி கூடம் மற்றும் ஆய்வகத்தை அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாணவர்களின் பயிற்சிக்காக அமைக்கப்பட்டு உள்ள சி.என்.சி மெஷின், அதிநவீன இயந்திரங்கள், கருவிகள், மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
முன்னதாக அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைச்சர் வருவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னரே பயிற்சி கூடம் மற்றும் ஆய்வகத்தை அங்குள்ள ஆசிரியர்கள் மாணவர்களை கொண்டு துணிகளால் அவசரம் அவசரமாக தரையை துடைக்க வைத்தது காண்போரை முகம் சுழிக்க வைத்தது.
மேலும் அமைச்சர் வருவதற்கு 7 மணி நேரத்திற்கு முன்னரே மாணவர்களை தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாணவர்களை ஆசிரியர்கள் வரவழைத்துள்ளனர். இதனால் மாணவர்கள் சோர்வடைந்து காணப்பட்டனர்.
இந்த நிகழ்வில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவ், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.