ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை விரதமானது தமிழர்கள் மத்தியில் மிக முக்கிய விரத நாளாகும். அதுவும் குறிப்பாக தந்தை இல்லாதவர்கள் அனுஷ்டிக்கும் விரத நாளாகும்.
அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்., மேலும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று முன்னோர்க்கு ‘ பிதுர் கடன்’ கொடுத்தால் அது அவர்களை நேரடியாக சென்றடையும் என்பதும் நம்பிக்கை.அந்த வகையில் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை.
அந்த வகையில், இந்த ஆண்டு ஆடி மாதம் இரண்டு அமாவாசைகள் வந்தது. அதன்படி 2-வது ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக நீர் நிலைகளில் பொதுமக்கள் திரண்டனர்.
அந்த வகையில், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் திருச்சி மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர். இதற்காக 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் ஸ்ரீரங்கம் காவிரிகரை அம்மா மண்டபத்தில் அமர்ந்து இருந்தனர். இதில் ஒரு சில இடங்களில் 10 முதல் 30-க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் வரிசையாக அமர வைத்து அவர்களது மூதாதையர்களின் பெயர்களை உச்சரித்து, வேத மந்திரங்களை ஓதினர்.
பின்னர், பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிண்டமாக பிடித்து மந்திரங்கள் ஓதிய பின் அவற்றை ஆற்றில் கரைத்து தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்டனர். அதன் பின்னர் தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை வழங்கினர்.
இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுப்பதற்காக அம்மா மண்டபம் படித்துறை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகமாக செல்வதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
வெளியூரில் இருந்து அம்மா மண்டபம் வந்த பொதுமக்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.
ஆடி அமாவாசை முன்னிட்டு ஸ்ரீரங்கம் செல்லும் பேருந்துகளில் அதிக கூட்டம் காணப்பட்டது. மேலும் மாம்பழச்சாலை அம்மா மண்டப சாலை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் சிரமம் இன்றி சென்று தர்ப்பணம் கொடுக்க காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஷானு