டெல்டா மாவட்டங்களில் தூர்வார ரூ.80 கோடி ஒதுக்கீடு - விவசாயிகள் கருத்து என்ன?

டெல்டா மாவட்டங்களில் தூர்வார ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு ’யானை பசிக்கு சோளப்பொரியா’? என விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிக்கு 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள் யானை பசிக்கு சோளப்பொரியா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

வரும் ஜுன் மாதம் மேட்டூர் அணை திறப்பிற்குள்ளாக காவிரி டெல்டா மாவட்டங்களிலுள்ள ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள் என அனைத்து நீர் நிலைகளையும் தமிழக அரசு தூர்வார முடிவு செய்து 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. ’இந்த சொற்ப பணத்தில் எப்படி டெல்டா மாவட்டங்கள் முழுவதிலுமுள்ள நீர்நிலைகளைத் தூர்வார முடியும். இந்த நிதி ஒதுக்கீடானது யானைப்பசிக்கு சோளப்பொரி போன்று உள்ளது’ என்று விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன், “கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக மிகக்குறைவான தொகையை ரேஷன் முறையில் ஒதுக்கீடு செய்வது ஏற்கத்தக்கதல்ல. இந்த சொற்ப தொகை மூலம் காவிரி டெல்டா முழுவதையும் தூர் வாரி முழுமை அடைந்துவிட்டதாக தெரிவிப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைத்தான் அளிக்கும். தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்வதை அரசு கொள்கையாக பின்பற்றவேண்டும். தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் ₹80 கோடி ரூபாய் யானைப்பசிக்கு சோளப்பொரி போன்று மிகக்குறைவாக உள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ் 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 952 கோடி ரூபாய்க்கு அனுமதி பெற்று காவிரி டெல்டாவில் கடல் முகத்துவாரம் வரை ஆறுகளை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தை செயல்படுத்தினார். முதற்கட்டமாக 542 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரிச்சந்திரா ஆறு, அடப்பாறு, மரைக்கா கோரையாறு, முள்ளியாறு, வெள்ளையாறு உள்ளிட்ட ஆறுகள் சீரமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது கட்ட நிதியை பெற்று பாமணி ஆறு, கோரையாறுகளை தூர்வார திட்டமிடப்பட்டது.

ஆனால் இதுவரையிலும் இரண்டாம் கட்ட நிதி பெறப்படாததால் இரண்டு ஆறுகளும் புதர்கள் மண்டி மேடாக இரு கரைகளுக்கும் மேலான உயரத்தில் நீரோடும் பகுதி காட்சியளிக்கிறது. அத்துடன் நீரோட்டம் மாறி பாசனப்பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பெய்யக்கூடிய பெருமழை வெள்ள நீரைக் கடலுக்குக் கொண்டுச் சேர்ப்பது இந்த இரண்டு ஆறுகள்தான். ஆசிய வளர்ச்சி வங்கி நிதி வழங்கப்படாததை காரணம் காட்டி தூர்வார நடவடிக்கை எடுக்காததால் வெள்ளக்காலங்களில் இந்தப்பகுதி மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை சந்திக்கப்போகிறது. இதனை நம்பி இருக்கின்ற சுமார் 2 இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன நீர் ஆதாரங்களை இழக்கக்கூடிய பேராபத்தும் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக தமிழக முதல்வர் நீர்பாசனத்துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி ஆசிய வங்கி நிதியை பெறுவதற்கான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும். இத்திட்டத்தை காரணம் காட்டி 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்தமாக இந்த இரு ஆறுகளையும் தூர்வாருவதையும், பராமரிப்பு செய்வதையும் கைவிட்டுள்ளனர்.

மேலும் காவிரி டெல்டா பாசன மதகுகள், கதவணைகள் பராமரிப்பு செய்வதற்காக ‘மேசண்ட்ரி ஒர்க்’ என்ற தலைப்பின் கீழ் ஒதுக்கப்படுகின்ற நிதி பல ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்படாததால் பாசன காலங்களில் தண்ணீரை கொண்டு செல்வது மற்றும் வெள்ள காலங்களில் நீரை வடியவைப்பது உள்ளிட்ட விஷயங்களில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு விடுகிறது. சிறு மழை பெய்தால் கூட வெள்ளப்பெருக்கால் விளைநிலங்கள் பாதிக்கப்படக்கூடிய நிலை தொடர்கிறது. எனவே ‘மேசண்ட்ரி ஒர்க்’ என்ற தலைப்பின் கீழ் அதிக நிதி ஒதுக்கீடு செய்யவும் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.

-ஆர்.விவேக் ஆனந்தன்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com