நான் இப்போ ஆளுநர் என்பது உங்களுக்கு புரியவில்லையா?இந்த கேள்வி ஆளுநரிடம் கேட்கக்கூடாது என மகளிர் உரிமை தொகை தொடர்பான கேள்விக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் பதில் அளித்துள்ளார்.
நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் தஞ்சை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு தஞ்சை வந்தடைந்தார்.இந்நிலையில் இன்று காலை உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக கோவிலுக்கு வந்த ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு பெரிய கோயிலை சுற்றி பார்த்து சுவாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இல.கணேசன், ”நூற்றுக்கும் மேற்பட்ட முறை இந்த ஆலயத்திற்கு தரிசனம் செய்ய வந்து இருக்கிறேன்.தஞ்சைக்கு வந்துவிட்டு பெரியக்கோவில் பார்க்காமல் போவது என்பது என்னால் இயலாத காரியம்.
ஆளுநர் பொறுப்பேற்ற பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தரிசனம் செய்ய வந்து இருக்கிறேன்.நான் ஆன்மிகத்தையும், தேசியத்தையும் நம்ப கூடியவன்.
தமிழக அரசு மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கியது தொடர்பாக கேட்டதற்கு, நான் இப்போது ஆளுநர் என்பது உங்களுக்கு புரியவில்லை.இந்த கேள்வி ஆளுநரிடம் கேட்கக்கூடாது என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
மேலும், தஞ்சை பெரிய கோவில் உலக அதிசய பட்டியலில் சேர்க்கப்படுமா ? என்ற கேள்விக்கு, என்னை பொறுத்தவரை உலக அதிசயம் பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசாங்கத்தின் முயற்சி எந்த அளவில் இருக்கும் என தெரியவில்லை. நானும் என்னுடைய பரிந்துரையை தெரிவிப்பேன்” என தெரிவித்தார்.