பெங்களூரில் சரமாரியாக வெட்டப்பட்ட மதுரை திமுக முக்கிய புள்ளி

திமுக முன்னாள் மண்டலத்தலைவர் வி.கே.குருசாமி பெங்களூரில் மர்ம ஆசாமிகள் சரமாரியாக வெட்டி சாய்த்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக முன்னாள் மண்டலத்தலைவர் வி.கே.குருசாமி
திமுக முன்னாள் மண்டலத்தலைவர் வி.கே.குருசாமி

மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் விகே. குருசாமி (திமுக), ராஜபாண்டி (அதிமுக) இருவரும் மாநகராட்சி மண்டலத் தலைவராக இருந்தவர்கள். கடந்த 20 ஆண்டுக்கு முன்பு இருந்தே இவர்களுக்குள் அரசியல் ரீதியாக முன்விரோதம் இருந்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து இருதரப்பிலும் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் மாறி, மாறி மோதிக்கொண்டனர். அடுத்தடுத்து கொலைச் சம்பவங்களும் அரங்கேறின. விகே.குருசாமி தரப்பில் அவரது சொந்த மருமகன் வழக்கறிஞர் பாண்டியன் உட்பட 10க்கும் மேற்பட்டோரும், ராஜபாண்டி தரப்பில் அவரது மகன் உட்பட சிலரும் தொடர்ந்து கொல்லப்பட்டனர்.

இருதரப்பினரும் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவாகி நீதிமன்றம் மூலம் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கிய விகே.குருசாமி, அவரது மகன் மணி ஆகியோருக்கு மதுரையில் ஆபத்து இருப்பதை உணர்ந்து, இருவரும் வெளியூர்களில் தங்கி இருந்து கொண்டு நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளை சந்தித்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராஜபாண்டியின் நெருங்கிய உறவினர் வெள்ளக்காளி என்பவர், குருசாமியை கொலை செய்ய தொடர்ந்து திட்டமிட்டுள்ளார். கடந்த ஜனவரியில் விகே.குருசாமி மதுரையிலுள்ள அவரது வீட்டுக்கு வருவதாக தகவல் அறிந்த வெள்ளக்காளி, வெளியூர் நபர்களை பயன்படுத்தி கொல்ல முயன்றுள்ளார். இதற்காக திருச்சியைச் சேர்ந்த லட்சுமணன், சகோதரர் ராமன் என்பவர் மூலம் கோவை, திண்டுக்கல், பழநி, திருச்சி பகுதியைச் சேர்ந்த கூலிப்படையை ஏற்பாடு செய்தார். குருசாமியின் வீடு அருகே 6 பேர் ஆயுதங்களுடன் மேல அனுப்பானடி பகுதியில் பதுங்கி இருந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த கீரைத்துறை காவல் ஆய்வாளர் பெத்துராஜ் உள்ளிட்ட போலீஸார், திண்டுக்கல் மேட்டுபட்டி ஜேசு ரூபன், திருச்சி அரியமங்கலம் மணிகண்டன், மதுரை காமராஜபுரம் மாதவன், மதுரை தென்பழஞ்சி ராஜேஷ், பழநி அடிவாரம் பூபாலன், எல்லீஸ் நகர் பாண்டியராஜன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, குருசாமியும், அவரது மகன் மணியும் வெளியூர்களில் தலைமறைவாக இருந்து கொண்டு, வழக்கறிஞர்கள் மூலம் வழக்குகளை சந்திக்கின்றனர். திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு அவ்வப்போது வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பெங்களூரூ பானசுவாடி போலீஸ் சரகத்திலுள்ள சுக்சாகர் பகுதியிலுள்ள ஓட்டல் ஒன்றில் காப்பி சாப்பிடுவதற்கு குருசாமி நடந்து சென்றுள்ளார். அப்போது, அவரை 5 பேர் கொண்ட கும்பல் காரில் பின் தொடர்ந்து, ஓட்டலுக்குள் சென்றபோது, அவரை சுற்றிவளைத்து அவர்மீது அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் நிலை குலைந்து கீழே அவர் விழுந்தபின், அக்கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது.

பலத்த வெட்டுக்காய மடைந்த குருசாமியை அக்கம், பக்கத்தினர் மீட்டு, அருகிலுள்ள க்யூரா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெங்களூர் கிழக்கு மண்டல துணை காவல் ஆணையர் பீமசங்கர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

வி.கே.குருசாமியை வெட்டி விட்டு தப்பிய கும்பல் மீது கொலை வழக்கு முயற்சி பதிவு செய்து பானசுவாடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் மதுரை காமராசர்புரம், கீழைத்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு கருதி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

- பாலா

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com