'அதிமுக மாநாட்டிற்கு நீங்கள் அனைவரும் வரணும்' என்று நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரையில் வரும் 20ஆம் தேதி அதிமுக சார்பில் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ மாநாட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கோவில்பட்டி திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள ஜெயிலர் படத்தை பார்க்க ரஜினி ரசிகர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கினார். மொத்தம் 500 டிக்கெட் அவர் இலவசமாக வழங்கினார்.
இது குறித்து கடம்பூர் ராஜு கூறும்போது, "மதுரையில் நடக்கும் அதிமுக எழுச்சி மாநாடு உலக சரித்திர புகழ் வாய்ந்த மாநாடாக நடைபெற உள்ளது. உலகத்திலேயே ஏழாவது பெரிய கட்சியாக அதிமுக இருக்கிறது. தமிழகத்தில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சியின் அவலங்களையும் ஏமாற்றங்களையும் பார்த்து மக்களின் பார்வை அதிமுகவின் பக்கம் திரும்பி உள்ளது. அதிமுக மாநாட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களையும் பொது மக்களையும் அழைக்கும் வகையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தினை இலவசமாக பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரசிகர்களும் ஆர்வமுடன் மாநாட்டில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதிமுக மாநாட்டுக்கு எதிராக சிலர் ஒரு குறிப்பிட்ட சமூகம் பேரில் வால் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதிமுக அனைத்து மக்களுக்கான கட்சி. அந்த குறிப்பிட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் தான் இன்றைக்கு மாநாட்டு பணியில் முழுமையாக செய்து வருகின்றனர். இது போன்ற சலசலப்புக்கெல்லாம் அதிமுக அஞ்சாது" என்றார்.