நாச்சியார் கோயில் காவல் உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் சக காவலர்களுடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வண்டுவாஞ்சேரி இரட்டை வாய்க்கால் அருகே சவுடு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்.
அப்போது போலீசாரை பார்த்து லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் சட்ட விரோதமாக 5 யூனிட் சவுடு மண் அள்ளி விற்பனைக்கு எடுத்து வந்தை போலீசாரிடம் உளறினர். இதனால் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக லாரி உரிமையாளரான தஞ்சாவூர் மாவட்ட அ.தி.மு.க சிறுபான்மையினர் அணியின் துணை செயலாளரும், மாத்தூர் ஊராட்சி மன்றத்துணைத் தலைவருமான சார்லசை போலீசார் கைது செய்தனர்.
பின்னர், கைது செய்த மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற எஸ்.ஐ ஈஸ்வரன் வண்டுவாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்து மணல் கொள்ளை சம்பந்தமாக எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்குமாறு தெரிவித்தார்.
இதனை காதில் போட்டுக் கொள்ளாத கிராம நிர்வாக அலுவலர் சங்கர் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டு காவல் நிலையம் பக்கமே வரவில்லை என தெரிகிறது. இதனால் பொறுமை இழந்த எஸ்.ஐ ஈஸ்வரன் சம்பவம் குறித்து கும்பகோணம் தாசில்தார் வெங்கடேசனை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசினார்.
அப்போது பிரச்னை எதுவுமே தெரியாததுபோல் காது கொடுத்து கேட்டுவிட்டு ‘நீங்கள்தானே லாரியை புடிச்சீங்க. நீங்களே வழக்குப்பதிவு செய்து கொள்ளுங்கள்’ எனக் கூறிவிட்டு ‘எதுவாக இருந்தாலும் இன்ஸ்பெக்டரிடம் பேசிக் கொள்ளுங்கள். நான் அவரிடம் பேசிவிட்டேன்’ என கூறியுள்ளார்.
‘ஏன் புகார் அளிக்க மறுக்கிறீர்கள்?’ என எஸ்.ஐ கேட்டதற்கு ‘என்ன சொல்ல வேண்டும்?’ என மிரட்டும் தோரணையில் பேசியுள்ளார். தொடர்ந்து கோட்டாட்சியரிடம் எஸ்.ஐ ஈஸ்வரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததை விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
அப்போது கோட்டாட்சியர் பூர்ணிமா ‘சரி பாக்குறேன்’ என ஒரே வார்த்தையில் பதில் அளித்துவிட்டு தொலைபேசியை துண்டித்துள்ளார். அதன் பிறகு சுமார் ஆறு மணி நேரம் கழித்து கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையம் வந்து லாரி உரிமையாளர் சார்லஸ் பெயரை குறிப்பிடாமல் மேலோட்டமாக புகார் அளித்துள்ளார்.
இதனால் ‘வழக்கு நீர்த்துப் போய்விடுமோ?’ என உணர்ந்த எஸ்.ஐ ஈஸ்வரன் மீண்டும் கோட்டாட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது கோட்டாட்சியர், ‘உங்களுக்கு என்னதான் வேணும்? துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு முறையாக மரியாதை செலுத்துங்கள். எதுவாக இருந்தாலும் டி.எஸ்.பி இடம் பேசிக்கொள்ளுங்கள்’ என தொடர்பை துண்டித்துள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
மணல் கொள்ளையை தடுக்க வேண்டிய அதிகாரிகளே, அதனை கண்டும் காணாமல் இருந்து விடுவது மட்டும் இல்லாமல் மணல் கொள்ளையை தடுக்கும் எஸ்.ஐ ஈஸ்வரன் போன்ற அதிகாரிகளுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும் வரை மண்ணை மட்டுமல்ல. மக்களையும் யாராலும் காப்பாற்ற முடியாது என சமூக ஆர்வலர்கள் முணுமுணுக்கின்றனர்.